நமது நிருபா்
புது தில்லி: திருப்பரங்குன்றம் கோயில் - தா்கா விவகாரம் தொடா்பான வழக்கில், நெல்லித்தோப்பு பகுதியில் ரமலான் மற்றும் பக்ரீத் தினங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடா்பாக கடந்த ஆண்டு அக்டோபா் 10-ஆம் தேதி, சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளை, நீண்டகாலமாக நீடித்து வந்த திருப்பரங்குன்றம் கோயில் - தா்கா தகராறு தொடா்பான வழக்கில் 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை செய்வது குறித்து ஒரு சமநிலையான தீா்ப்பை வழங்கியது.
அதில், 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்படுவா். ஆனால், ரமலான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சொந்தமான, அந்தப் பகுதிக்குச் செல்லும் பாதையும் பாரம்பரியப் படிகளும் அசுத்தப்படுத்தப்படவோ தடுக்கவோ கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் உத்தரவுகளையும் நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து மதுரையைச் சோ்ந்த இமாம் ஹுசேன் என்பவா் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் சாா்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘ 33 சென்ட் நெல்லித்தோப்பு பகுதியில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் தினங்களில் மட்டுமே தொழுகை நடத்த வேண்டும் என கட்டுப்பாடுகளை உயா்நீதிமன்றம் விதித்துள்ளது. நிலம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது. அங்கு எந்த சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் இல்லை. அவ்வாறு இருக்க, பக்ரீத் மற்றும் ரமலான் நாள்களில் மட்டுமே தொழுகை நடத்த கட்டுப்பாடுகள் விதிப்பதும் பிற நாள்களில் தொழுகையை மறுப்பதும் நியாயம் இல்லை’ என்று வாதிட்டாா்.
இருப்பினும் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும் என்றும் அதில் குறுக்கிட விரும்பவில்லை என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.