ஆம் ஆத்மி கவுன்சிலரின் தேர்வை ரத்து செய்து மறுதேர்தல் நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவு
கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலரின் தேர்வை ரத்து
கடந்த ஆண்டு நடைபெற்ற தெற்கு தில்லி மாநகராட்சி வார்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கவுன்சிலரின் தேர்வை ரத்து செய்து அந்த வார்டுக்கு மறு தேர்தல் நடத்துமாறு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெற்கு தில்லி மாநகராட்சி சிராக் தில்லியில் 88எஸ் வார்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பூஜா 9755 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதிபா சௌகான் 73 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில், அவர் தில்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் பூஜாவின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். அதில், "தேர்தலில் போட்டியிட்ட பூஜா உரிய வகையில் வேட்புமனுவை பூர்த்தி செய்யவில்லை. பிரமாணப் பத்திரத்தில் முரண்பாடுகள் இருந்தன. ஆனால், அவரது மனுவை உரிய வகையில் தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலிக்காமல் ஏற்றுக் கொண்டார்.
இதனால், தில்லி மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் விதிகள் 2012-இன்படி தேர்தல் நடைபெறவில்லை. விதிகள் மீறப்பட்டுள்ளது. இதனால், அவரது வெற்றியை செல்லாதது என அறிவிக்க வேண்டும். மேலும், என்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அல்லது அந்த வார்டில் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்' என்று அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆஷா மேனன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
தெற்கு தில்லி மாநகராட்சி 88எஸ் வார்டு தேர்தலில் போட்டியிட்ட பிரதிவாதி (ஆம் ஆத்மி வேட்பாளர் பூஜா) தாக்கல் வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தேதி உள்ளிட்ட விஷயங்களில் முரண்பாடுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதை சிறிய பிழை எனக் கருதிவிட முடியாது. மேலும், அவரது வேட்புமனுவில் தேதியும், நேரமும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வேட்புமனு உரிய வகையில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால், பிரதிவாதியின் (பூஜா) வேட்பு மனுவை ஏற்கப்பட்டிருக்கிறது. மனு பரிசீலனையில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டு, பிரதிவாதியின் தேர்வு ரத்து செய்யப்படுகிறது. சிராக் தில்லி 88எஸ் வார்டுக்கு மறு தேர்தல் நடத்த தில்லி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்படுகிறது. அதேவேளையில், தாம் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரும் மனுதாரரின் (பிரதிபாக சௌகான்) கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.