தவறிழைக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை: வரி வதிப்பு வாரியம் உத்தரவு
வரி செலுத்துவோருக்கு எதிராக பாரபட்சமான மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு
வரி செலுத்துவோருக்கு எதிராக பாரபட்சமான மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படும் மதிப்பீட்டு அதிகாரிகள் மீது பணியிடமாற்றம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் (சிபிடீடி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, நாட்டில் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களின் தலைவர்களுக்கு, சிபிடீடி தலைவர் சுஷில் சந்திரா அண்மையில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வரி செலுத்துவோருக்கு எதிராக பாரபட்சமான மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை மூலம், வரி செலுத்துவோரின் குறைகளை தீர்ப்பதில் தோல்வி ஏற்பட்டுள்ளதாக தமது அதிருப்தியை சுஷில் சந்திரா வெளிப்படுத்தியுள்ளார்.
வருமான வரித்துறைக்கான கொள்கைகளை வரையறை செய்யும் அதிகாரம் மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்துக்கு உள்ளது. அதன்படி, மேற்குறிப்பிட்ட விவகாரத்தில் வரி செலுத்துவோருக்கு ஏற்படும் குறைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வருமான வரித்துறை மண்டல அலுவலகத்திலும், முதன்மை ஆணையர் தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிபிடீடி உத்தரவிட்டது.
வருமான வரி செலுத்துவோருக்கு எதிராக பாரபட்சமான மதிப்பீடு முறை கடைப்பிடிக்கப்படுவதால் உருவாகும் ஊழல் மற்றும் லஞ்சம் போன்ற பிரச்னைகளை தடுக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இத்திட்டத்தை முன்னெடுத்தது.
இதன்படி, பாரபட்சமாக மதிப்பீடு செய்த 10 அதிகாரிகள் மீது வருமான வரித் துறை இதுவரை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஆனாலும், முழுமையான தீர்வை எட்ட முடியவில்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வரி செலுத்துவோர் பாதிக்கப்படாத வகையில், அவருக்கு எதிரான பாரபட்சமான மதிப்பீடுகளை தடுப்பதற்கு அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களிலும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று தமது சுற்றறிக்கையில் சிபிடீடி தலைவர் சுஷில் சந்திரா குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
கடந்த 2017-18 நிதியாண்டில், வரி செலுத்துவோரின் குறைகள் தீர்க்கப்பட்டது தொடர்பாக எந்தவொரு மண்டலத்தில் இருந்தும் ஒரேயொரு அறிக்கை கூட வரவில்லை. எனவே, பாரபட்சமான மதிப்பீடுகளை தடுக்கும் குழுவினரை, வருமான வரித்துறையின் மண்டலத் தலைவர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். அதில் முறையாக செயல்படாத அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பதுடன், தேவைப்பட்டால் பணியிடமாற்றம் செய்வது அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மண்டலத் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தமது சுற்றறிக்கையில் சிபிடீடி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.