மின் கட்டணக் குறைப்பு என்பது ஏமாற்று வேலை
தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
இது குறித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வியாழக்கிழமை கூறியதாவது: புதிய மின்கட்டண முறையில் மின் கட்டண மீட்டர்களுக்கான நிலையான கட்டண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானிய முறையில் மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். புதிய கட்டணத்தின்படி, 150 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் குறையவுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் 150 யூனிட் வரையே மின்சாரத்தை பயன்படுத்துவர். அவர்கள் 400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பில்லை. எனவே, இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது ஒரு ஏமாற்று வேலையாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கேஜரிவால், மக்களை ஏமாற்றி விட்டார். தில்லி அரசு வழங்கும் மானியத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்களே லாபமடைகின்றன. மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.6,000 கோடி மானியத் தொகையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றார் அவர்.