குருகிராம் மாணவர் கொலை வழக்கு: துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு அவகாசம்
: குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் துணைக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) ஜூலை 4-ஆம் தேதி வரை கால
: குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் துணைக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) ஜூலை 4-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்து கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால், விசாரணையை முடிக்க ஒன்றரை மாதங்கள் தேவைப்படுவதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்து வரும் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஜஸ்பிர் சிங் குந்து, சிபிஐக்கு கூடுதல் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 16 வயது சிறாரை பெரியவர்' என்ற பிரிவில் விசாரணை நடத்த சிறார் நீதிமன்றம் அறிவித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை ஒத்திவைத்த நீதிபதி, இதற்கான உத்தரவு மே 21-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்றார். நீதிமன்றத்தில் இக்கொலைச் சம்பவ வழக்கு விசாரணை ஜூலை 14-ஆம் தேதி தொடங்க உள்ளது.
முன்னதாக, நீதிமன்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுஷில் தேக்ரிவால், இந்த வழக்கில் 16 வயது சிறாரை பெரியவர் என விசாரணை நடத்த வேண்டும் சிறார் நீதிமன்றம் சரியாக அறிவித்துள்ளது. இதில் குறைபாடு ஏதும் இல்லை. இந்த உத்தரவில் சட்டவிரோதமும் ஏதும் இல்லை' என்றார்.
குற்றம்சாட்டப்பட்ட நபர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உரிய வாய்ப்பு அளிக்காமல் சிறார் நீதிமன்றம் அறிவித்திருப்பது சரியல்ல' என்றார்.
பின்னணி: கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி குருகிராமில் தனியார் பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டான். இச்சம்பவத்தை குருகிராம் காவல் துறையினர் விசாரித்து வந்தனர். பள்ளிப் பேருந்து உதவியாளர் அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர். இந்நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைதான அசோக் குமார் கொலைக் குற்றத்தில் ஈடுபடவில்லை என சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. மேலும், இந்த வழக்கில் அதே பள்ளியில் படித்து வந்த மாணவரை போலீஸார் கைது செய்தனர். 16 வயதாகும் அந்த மாணவரை, சிறுவனாக அல்லாமல் பெரியவராக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்று சிறார் நீதிமன்றம் டிசம்பர் 20-இல் உத்தரவிட்டது. மேலும், தேர்வுகள் தள்ளிப் போக வேண்டும் என்ற நோக்கித்திற்காகவும், பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நோக்கிலும் சிறுவனைக் கொலை செய்ததாக சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.