செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மாணவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு
தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லியில் புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரி அமைந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல்வாதிகள், எழுத்தாளர் கள் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். தில்லிப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் இக் கல்லூரிக்கு பல்கலைக்கழக மானியங்கள் குழுவால் தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர்கள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முயற்சிகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுத் தலைவருக்கு தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அண்மையில் எழுதிய கடிதத்தில், தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டபூர்வ அமைப்புக்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது' எனக் கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்திந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயின்ட் ஸ்டீபனை விற்காதே', மாணவர் வாழ்க்கையில் விளையாடாதே' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, செயின்ட் ஸ்டீபன் வளாகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் (தில்லி பல்கலைக்கழகம்) மதுரிமா குண்டு கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரிகள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டு அக்கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க முடிவெடுத்துள்ளனர். இம் முடிவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் ஆர்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். மேலும், பல்கலைக்கழக மானிய குழு இந்த மாதம் 24- ஆம் தேதி மீண்டும் செயின்ட் ஸ்டீபன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கல்லூரிக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டால் அரசு நிதி உதவி நிறுத்தப்படும். கல்விக் கட்டணம் உயரும், இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படாது, கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும், மாணவர்கள் தங்களுக்கு பிடித்த ஆய்வுத் தலைப்புக்களைத் தேர்ந்தெடுக்க முடியாது, மேலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும். ஆகவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கக் கூடாது என்றார் அவர்.