தில்லி உயர்நீதிமன்றத்தில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு பெண் நீதிபதி உள்பட நான்கு நீதிபதிகள் திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் புதிதாக ஒரு பெண் நீதிபதி உள்பட நான்கு நீதிபதிகள் திங்கள்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நீதிபதிகளாக ஜோதி சிங், பிரதீக் ஜலன், அனுப் ஜெய்ராம் பம்பானி, சஞ்சீவ் நருலா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
புதிய "ரோஸ்டர்'-இன்படி, நீதிபதி எஸ். ரவீந்திர பட் அமர்வில் நீதிபதி பிரதீக் ஜலன், நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் நீதிபதி அனுப் ஜெய்ராம் பம்பானி இடம் பெறுவர். இதேபோல, நீதிபதி ஜி.எஸ். சிஸ்தானி அமர்வில் நீதிபதி ஜோதி சிங், நீதிபதி எஸ். முரளீதர் அமர்வில் நீதிபதி சஞ்சீவ் நருலா இடம் பெறுவர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகள், வழக்குரைஞர்களாகப் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லி உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆகும். எனினும், நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பதற்கு முன்பு, 26 நீதிபதி பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், நான்கு புதிய நீதிபதிகளின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, குடியரசுத் தலைவரால் புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.