தில்லி ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு: உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தில்லி கரோல் பாக் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
தில்லி கரோல் பாக் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. மூன்று பேரின் உடல்களும் தமிழக அரசின் ஏற்பாட்டில் சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
தில்லி கரோல் பாக்கில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். ஒருவர் திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு அருகேயுள்ள வெற்றிவேல் நகரைச் சேர்ந்த சுகுமாரன் மகன் அரவிந்த் (39), மற்றொருவர் கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் நந்த குமார் (33) என அடையாளம் காணப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்ட் மேன் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர்கள், நிறுவனத்தின் நிர்வாகக் கூட்டத்துக்காக தில்லி வந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்நிலையில், மற்றொருவர் திருச்சியைச் சேர்ந்த மருத்தவர் சங்கரநாராயணன் (55) என புதன்கிழமை அடையாளம் காணப்பட்டது. அவர் தில்லியில் மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க வந்ததும், மகராஷ்டிரத்தைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷுடன் ஒரே அறையில் தங்கியதும் தெரிய வந்தது.
உறவினர்கள்: தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்களும் தில்லிக்கு விமான மூலம் புதன்கிழமை காலை வந்தடைந்தனர். பின்னர் உடல்கள் வைக்கப்பட்டிருந்த ஆர்எம்எல் மருத்துவமனைக்குச் சென்று உடல்களை அடையாளம் காட்டினர். பின்னர் உடல்கள் அருகில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பதனிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சங்கரநாராயணனின் உடல், இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் சென்னைக்கும், அரவிந்த், நந்தகுமார் ஆகிய இருவரின் உடல்களும் இரவு 9.15 மணிக்கு புறப்பட்ட விமானத்தில் கோவைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஹிதேஷ் குமார் எஸ்.மக்வானா ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு இல்லப் பணியாளர்கள் மேற்கொண்டனர். தமிழர்களின் உடல்களை பத்திரமாக அனுப்பி வைத்ததற்கு உறவினர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆறுதல்: இந்த தீ விபத்தில் உயிரிழந்ததமிழர்களின் உறவினர்களை ஆர்எம்எல் மருத்துவமனையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனிடையே திருச்சி பல் மருத்துவரின் இறுதிச் சடங்குகளை சென்னையில் நடத்த அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.