புதுதில்லி

தமிழக மேயர் பதவிகளில்  பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு: 2 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைப்பு

DIN

தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் மேயர் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இது தொடர்பாக ஈரோட்டைச் சேர்ந்த ராதாமணி பாரதி, உச்சநீதிமன்றத்தில் ஜூலை 7-ஆம் தேதி ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 2019-இல் 15-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி மேயர் பதவியை மகளிருக்கு ஒதுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 22-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் வி. மோகனா ஆஜாராகி, "தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளாக இருந்த எண்ணிக்கை தற்போது 15-ஆக உயர்ந்துள்ளது. 12 மாநகராட்சிகள் இருக்கும் போது 6 மாநகராட்சிகளில் மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 15 -ஆக உயர்ந்துள்ள நிலையில், 8 மாநகராட்சிகளின் மேயர் பதவியை மகளிருக்கு ஒதுக்க தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்' என்றார். 
அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குரைஞர் பா. வினோத் கண்ணா ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஏதுவாக, வழக்கு விசாரணை ஜூலை 29-ஆம் தேதி ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்,  அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீனிவாசன் ஆஜராகி, "இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டியுள்ளதால், இது தொடர்புடைய ஆலோசனைகளைத் தெரிவிக்க 2 வாரங்கள் அவகாசம் வேண்டும்' எனக் கோரினார். இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT