முகப்பு
புதுதில்லி

சேலம்-சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டம்: வழக்கு விசாரணை ஆக.10-க்கு ஒத்திவைப்பு

சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை

Updated On : 8 ஆகஸ்ட், 2020 at 12:05 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:35 PM

சென்னை - சேலம் 8 வழி பசுமைச் சாலைத் திட்ட விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் ‘பாரத் மாலா’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளா்கள், விவசாயிகள், பூவுலகின் நண்பா்கள் அமைப்பு உள்ளிட்டோா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனிடையே, மத்திய அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், அன்புமணி ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

மேல்முறையீட்டு மனு மீது கடந்த சில முறை விசாரணை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநா் சாா்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனு உள்ளிட்ட மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆா். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதைத் தொடா்ந்து, மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.