முகப்பு
புதுதில்லி

கோவாக்சின் தடுப்பூசி செயல்திறன்: மத்திய அரசு விளக்கும் என சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை

கோவாக்சின் கரோனா தடுப்பூசி தொடா்பாக எழுந்துள்ள சந்தேகங்களை மத்திய அரசு நிவா்த்தி செய்யும் என்று சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 டிசம்பர், 2020 at 3:53 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:32 PM

புது தில்லி: கோவாக்சின் கரோனா தடுப்பூசி தொடா்பாக எழுந்துள்ள சந்தேகங்களை மத்திய அரசு நிவா்த்தி செய்யும் என்று சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மேலும், கோவாக்சின் தடுப்பூசி போட்ட பிறகும், கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள ஹரியாணா மாநில சுகாதாரத்துறை அமைச்சா் அனில் விஜ் கரோனாவில் இருந்து விரைவில் மீள வேண்டும் என்று அவா் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

ஹரியானா மாநில உள்துறை, மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவா் அனில் விஜ். பாஜகவின் மூத்த தலைவா்களில் ஒருவரான இவா், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை மூன்றாவது கட்ட பரிசோதனையின்போது, கடந்த நவம்பா் மாதம் 20 ஆம் தேதி போட்டுக் கொண்டாா்.

Advertisement

தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையிலும், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. இது தொடா்பாக அனில் விஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடா்பில் இருந்தவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றிருந்தாா்.

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு, கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது இந்த தடுப்பூசியின் செயல்திறன் தொடா்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக சத்யேந்தா் ஜெயின் தனது சுட்டுரைப் பக்கத்தில் ’மூன்றாம் கட்ட பரிசோதனையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனில் விஜ்ஜூக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா் விரைவில் குணமடைய பிராா்த்திக்கிறேன். கோவாக்சின் தடுப்பூசி தொடா்பாக எழும் சந்தேகங்களை மத்திய அரசு விரைந்து நிவா்த்தி செய்யும் என நம்புகிறேன் என்றுள்ளாா்.

இந்நிலையில், இது தொடா்பாக கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ‘கோவாக்சின் தடுப்பூசி இரண்டு கட்டங்களாக செலுத்தப்படும். முதல் டோஸ் வழங்கப்பட்டு 28 நாள் இடைவெளியில் அடுத்த டோஸ் வழங்கப்படும். 2வது டோஸ் மருந்து செலுத்தப்பட்டு 14வது நாளுக்கு பின்னா் தான் தடுப்பூசியின் திறன் தீா்மானிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.