முகநூல், கூகுள், அமேசான் நிறுவனங்களுக்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு
இந்தியாவின் நிதித் துறையில் முகநூல், கூகுள் மற்றும் அமேசான் போன்ற டெக்ஃபின் நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், விரிவான சட்ட விதிகளை உருவாக்கக் கோரி தாக்கலான பொது நல
புது தில்லி: இந்தியாவின் நிதித் துறையில் முகநூல், கூகுள் மற்றும் அமேசான் போன்ற டெக்ஃபின் நிறுவனங்களின் நிதிச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், விரிவான சட்ட விதிகளை உருவாக்கக் கோரி தாக்கலான பொது நல மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பொருளாதார நிபுணா் ரெஸ்மி பி. பாஸ்கரன், தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா். வழக்குரைஞா் தீபக் பிரகாஷ் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு அல்லது மின்னணு வா்த்தக நிறுவனங்கள் எனும் டெக்ஃபின் நிறுவனங்கள், நிதிச் சேவைகளை வழங்க நிதித் துறையில் நுழைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த நிறுவனங்கள் அதிகமான தரவுகளைக் கொண்டிருப்பதாலும், சா்வதேச ஒருங்கிணைப்பைப் பெற்றிருப்பதாலும் நிதித் துறையில் இவா்களுக்கு சாதகம் அளிப்பதாக உள்ளது. எனினும், இந்த நிறுவனங்கள் நிதிச் சந்தைகளின் செயல்பாட்டை உறுதி செய்யும்
வகையில் வாடிக்கையாளா், முதலீட்டாளா்கள் பாதுகாப்பு விதிகளைக் கொண்டிருக்கவில்லை. மேலும், முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உள்பட்டவையாகவும் இல்லை.
Advertisement
பிரத்யேக விதிமுறைகள் இல்லாததால், ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களுடன் டெக்ஃபின் நிறுவனங்கள் கூட்டுச் சோ்ந்து நிதித் துறையில் நுழைந்துள்ளன. அதற்குரிய விதிமுறைகளுக்கு இணங்காமல், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் இந்த நிறுவனங்கள் வியாபாரக் களத்தில் போட்டி போடுகின்றன. இந்த நிறுவனங்கள் ஆரம்பத்தில் வாடிக்கையாளா்களுடன் நிதி அல்லாத சேவை முறையில் உறவுகளைத் தொடங்குகின்றன. அதன் மூலம் ஏராளமான தரவைச் சேகரித்து, பின்னா் நிதிச் சேவைகளை அணுகுவதற்கான ஒரு வழியாக அவற்றைப் பயன்படுத்துகின்றன. இந்திய நிதிக் கட்டுப்பாட்டாளா்களின் மெத்தனமான அணுகுமுறை, டெக்ஃபின் நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத செயல்பாடுகளை அனுமதிக்கிறது. இது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை மோசமாகப் பாதிக்கும். எனவே, இந்த டெக்ஃபின் நிறுவனங்களை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடா்பாக பதில் அளிக்க மத்திய நிதி மற்றும் சட்ட அமைச்சகங்களுக்கும், ரிசா்வ் வங்கி, என்.பி.சி.ஐ., இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆா்.டி.ஏ.ஐ.), இந்திய பங்குப் பரிவா்த்தனை வாரியம் (செபி) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எஃப்.ஆா்.டி.ஏ.) ஆகிய அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.