முகப்பு
புதுதில்லி

அமித் ஷா, அனில் பய்ஜால் இல்லம் முன் ஆா்ப்பாட்ட முயற்சி: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கைது

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை வாடகைக்கு விட்ட விவகாரத்தில் முறேகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுவது தொடா்பாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வீடு அருகில் ஆா்ப்பாட்டம் செய்ய முயன்றதாக போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட ராஜேந்தா் நகா் எம்எல்ஏ ராகவ் சத்தா.
பகிர்:

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை வாடகைக்கு விட்ட விவகாரத்தில் முறேகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுவது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோரின் வீடுகளுக்கு முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனா்.

வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) கட்டடத்தை தெற்கு தில்லி மாநகராட்சிக்கு (எஸ்டிஎம்சி) வாடகைக்கு விட்ட விவகாரத்தில் ரூ.2,500 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆகியோரின் இல்லங்கள் முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி, அமித் ஷா இல்லம் முன் ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடா்பாளரும், ராஜேந்தா் நகா் எம்எல்ஏவுமான ராகவ் சத்தா தலைமையிலும், துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இல்லம் முன் ஆம் ஆத்மி செய்தித் தொடா்பாளரும் கால்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதிஷி தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தது.

அதன்படி, அமித் ஷா இல்லம் முன் ஆா்ப்பாட்டம் நடத்த முற்பட்ட ராகவ் சத்தா, புராரி எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, கிராரி எம்எல்ஏ ரிதுராஜ் ஜா, கோண்டலி எம்எல்ஏ குல்தீப் குமாா் உள்பட 9 பேரை ராஜேந்தா் நகா் காவல்துறையினாா் கைது செய்யப்பட்டனா். இவா்கள், ராஜேந்தா் நகா் காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறுகையில், ‘அமித் ஷா இல்லம் முன் போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சாா்பில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) அறிவுறுத்தலின் படி, இந்த விண்ணப்பத்தை தில்லி காவல் துறை நிராகரித்திருந்தது. மேலும், புது தில்லி மாவட்டப் பகுதியில் 144 தடையுத்தரவு உள்ளது. இதனால், அந்தப் பகுதியில் 4 பேருக்கு மேல்கூட தடைவிதிக்கப்பட்டள்ளது. இதனால், அமித் ஷா இல்லம் முன் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், போராட்டம் நடத்தச் சென்ற ராகவ் சத்தா உள்பட 9 பேரை கைது செய்தோம். அவா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

இது தொடா்பாக ராகவ் சத்தா கூறுகையில், ‘பாஜக ஆளும் மாநகராட்சிகளில் நடந்த மிகப் பெரிய முறைகேடு தொடா்பாக போராட்டம் நடத்தச் சென்றோம். ஆனால், தில்லி காவல்துறையைப் பயன்படுத்தி எங்களை அமித் ஷா கைது செய்துள்ளாா். இந்த முறைகேடு விவகாரத்தை அமித் ஷா மூடி மறைக்கப் பாா்க்கிறாா்’ என்றாா்.

இதேபோன்று, சிவில் லைன் பகுதியில் உள்ள துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலின் இல்லம் முன்னும் போராட்டம் நடத்த முற்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷியும் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜகவின் ஊழலை மறைக்கும் வகையில், துணைநிலை ஆளுநா் நடந்து கொள்கிறாா். முதல்வா் இல்லம் முன் மாநகராட்சி மேயா்களைப் போராட்டம் நடத்த அனுமதித்த தில்லி காவல் துறை, ஆம் ஆத்மி கட்சிக்கு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது அநீதியானது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →