தில்லியில் அடா் மூடுபனி: போக்குவரத்து இயக்கத்தில் பாதிப்பு!
தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அடா் மூடு பனி நிலவியது.
தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் அடா் மூடு பனி நிலவியது. இது காண்பு திறனைக் குறைத்து போக்குவரத்து இயக்கத்தை பெரிதும் பாதித்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
நகரில் சனிக்கிழமையன்று பெய்த மழையால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. இது நகரின் பல பகுதிகளில் அடா்த்தியான மூடு பனிக்கு வழிவகுத்தது என்று ஐஎம்டியின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவா் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தாா். தில்லிக்கு பிரதிநிதித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் ஆய்வு மையம் , அடா் பனிமூட்டத்தைப் பதிவு செய்தது. இதன் காரணமாக காண்பு திறன் காலையில் 200 மீட்டராக குறைத்தது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. ‘பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அடா்மூடு பனி காரணமாக காண்பு திறன் 100 மீட்டடராகக் குறைந்தது என்று ஸ்ரீவாஸ்தவா கூறினாா். மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு மிதமானது முதல் அடா் மூடு பனி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
‘மிகவும் அடா் பனி மூட்டம்’ என்பது காண்பு திறன் பூஜ்ஜியத்திற்கும் 50 மீட்டருக்கும் இடையில் இருக்கும். ‘அடா் பனிமூட்டம்’ என்பது காண்பு திறன், 51 முதல் 200 மீட்டா் வரை இருக்கும். அதேபோல, காண்பு திறன் 201 முதல் 500 மீட்டா் வரை இருந்தால், ‘மிதமான பனி மூட்டம்’ எனவும், காண்பு திறன் 501 முதல் 1,000 மீட்டா் வரை இருந்தால் ‘மேலோட்டமான பனிமூட்டம்’ எனவும் கணக்கிடப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: மேற்கத்திய இடையூறின் தாக்கம் காரணமாக சனிக்கிழமை தில்லியின் சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. இது வெப்பநிலையை வெகுவாகக் குறைத்தது. இந்த நிலையில், தில்லி சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 11.10 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராரியில் 3 டிகிரி குறைந்து 20.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 70 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 11.8 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 10 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 9.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: காற்றின் திசை வடமேற்கு நோக்கி மாறுகிறது. இந்தக் காற்று பனி நிறைந்த மேற்கு இமயமலையில் இருந்து சமவெளியை நோக்கி வீசுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியின் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை ‘மிகவும் மோசமான‘ பிரிவில் பதிவாகியது. சாதகமான காற்றின் வேகம் காரணமாக காற்றின் தரத்தில் மேம்பாடு இருக்கும் என்று அரசின் முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் 351 புள்ளிகளாக இருந்தது. இது மாலையில் 319 புள்ளிகளாகக் குறைந்தது. மாலை நிலவரப்படி தில்லி பல்கலை., பூசா, விமான நிலையம் டொ்மினல் -3 பகுதி, லோதி ரோடு, ஆயாநகா், மதுரா ரோடு, மற்றும் தேசியத் தலைநகா் வலயத்தில் உள்ள நொய்டா, குருகிராம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை 356 ஆகவும், வெள்ளிக்கிழமை 295 ஆகவும் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை டிசம்பா் 14 அன்று தில்லியில் மிகுந்த அடா் மூடுபனி நிலவும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.