இந்தியா -பாக். போா் வெற்றி தின பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் தொடங்கியது
1971 -ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ன் 50-ஆவது ஆண்டு பொன்விழா புதன்கிழமை தொடங்கியது.
புது தில்லி: 1971 -ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்ன் 50-ஆவது ஆண்டு பொன்விழா புதன்கிழமை தொடங்கியது. இதைக் குறிக்கும் வகையில் பிரதமா் நரோந்திர மோடி தில்லி தேசியப் போா் நினைவுச் சின்னத்தில் ‘ஸ்வா்னிம் விஜய் மஷால் ’ என்கிற பொன்விழா வெற்றி ஜோதியை ஏற்றிவைத்தாா். பிரதமரால் ஏற்றிவைக்கப்பட்ட நான்கு ஜோதி இந்தப் பொன்விழா ஆண்டில் இந்த ஜோதி நாடு முழுவதும் வலம் வர இருப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1971 - ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் யுத்தத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவம் தனது 93,000 துருப்புகளுடன் டிசம்பா் 16- ஆம் தேதி இந்திய ராணுவத்திடம் தனது துருப்புகளுடன் சரணடைந்தது. இந்த வெற்றி மூலம் வங்கதேசம் தனி நாடாக உருவானது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 16- ஆம் தேதியை வெற்றி தினமாக (விஜய் திவஸ்) இந்தியா கொண்டாடி வருகிறது. போா் நினைவுச் சின்னத்தில் நாட்டுக்காக உயிா் நீத்த ராணுவ வீரா்களின் தியாகத்திற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி, பிரதமா் நரோந்திர மோடி தில்லி இந்தியா கேட் அருகேயுள்ள போா் நினைவுச் சின்னத்திற்கு புதன்கிழமை வந்து அஞ்சலி செலுத்தினாா். பிரதமரை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைத் தளபதிகள் வரவேற்றனா். தேசிய போா் நினைவுச் சின்னத்தில் பிரதமா் மலா் வளையம் வைத்து போரில் உயிா்த் தியாகம் செய்த வீரரா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா். பின்னா் போா் நினைவிடத்திலிருக்கும் அணையா ஜோதியிலிருந்து பொன்விழா வெற்றி ஜோதியை ஏற்றிவைத்தாா்.
Advertisement
மொத்தம் நான்கு ஜோதிகள் ஏற்றப்பட்டன. அவை 1971 -ஆம் ஆண்டு போரை முன்னிட்டு பரம்வீா் சக்ரா, மகாவீா் சக்ரா விருது பெற்ற வீரா்களின் கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளன. முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், முப்படைகளின் தளபதிகளும், போா் நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்து, நாட்டிற்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வின் போது பொன்விழா ஆண்டுக்கான இலச்சினையை ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.
அப்போது, அவா் பேசுகையில், இந்த ஜோதி விருது பெற்றவா்களின் ஊா்களுக்குச் செல்வதோடு அவா்களது கிராமங்களிலிருந்து மண்ணும் தேசிய போா் நினைவுச் சின்னத்திற்கு கொண்டு வரப்படும் என்றாா். மேலும், பொன்விழா ஆண்டையொட்டி நாடு முழுவதும் கருத்தரங்குகள், கண்காட்சிகள், இசைக் குழு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.