மகளிர், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000; பொது சிவில் சட்டம்! மேற்குவங்க பாஜக வாக்குறுதிகள்!
மேற்கு வங்கத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு...
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தொடர்ந்து 4 ஆவது முறையாக ஆட்சியமைக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதாவும் அதேநேரத்தில் முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தலைவர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேற்கு வங்க தேர்தலையொட்டி கொல்கத்தா வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதன்படி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், "மேற்குவங்கத்தில் எந்த ஊடுருவல்காரர்களையும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படாது, முழுக்க மேற்கு வங்க மாநில மக்களின் நலனில் கவனம் செலுத்துவோம்.
அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உறுதி செய்யப்படும்;
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 45 நாள்களுக்குள் அமல்படுத்தப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மாநில அரசு வேலைவாய்ப்புகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க பெண்கள் காவல்துறை உருவாக்கப்படும்.
குர்மாலி, ராஜ்போங்ஷி ஆகிய மொழிகள் இந்திய அரசியலமைப்பின் 8 ஆவது அட்டவணையில் சேர்க்கப்படும்.
அரிசி, உருளை, மாம்பழம் சாகுபடிக்கு அரசு ஆதரவளிக்கும்.
மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு மீன்கள் ஏற்றுமதி வலுப்படுத்தப்படும். கால்நடைகளைக் கடத்துவது தடை செய்யப்பட்டு அவைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
6 மாதங்களில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும்.
தேயிலை தோட்டங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும்.
வந்தே மாதரம் அருங்காட்சியகம் உருவாக்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பாஜக-வின் அனைத்துத் திட்டங்களையும் மேற்கு வங்கத்தில் முழுமையாகச் செயல்படுத்துவோம்" என்று கூறினார்.
BJP Election manifesto released by amit shah in west bengal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.