முகப்பு
தமிழ்நாடு

மாற்றப்படுகிறாரா தமிழக ஆளுநர் ஆர்லேகர்? அமித் ஷாவுடன் தில்லியில் திடீர் சந்திப்பு

மத்திய அமைச்சரவை மற்றும் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் தலைநகரில் தீவிரமடைந்துள்ள நிலையில், சில மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Updated On : 2 ஜூலை 2026, 5:59 am IST
- Photo X
பகிர்:

நமது சிறப்பு நிருபர்

மத்திய அமைச்சரவை மற்றும் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் குறித்த ஆலோசனைகள் தலைநகரில் தீவிரமடைந்துள்ள நிலையில், சில மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்ற தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக கேரளம் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிஷங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆளுநர்கள் மாற்றத்தின்போது, கேரள ஆளுநராக இருக்கும் ஆர்.வி.ஆர்லேகர் தமிழக ஆளுநராகவும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து புதிய அரசு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்றது.

Advertisement

Advertisement

இந்தச் சூழலில், மாநிலத்தின் சுமுகமான நிர்வாக செயல்பாடுகளுக்கு தற்காலிக ஆளுநருக்குப் பதிலாக ஒரு முழுநேர ஆளுநரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, இரு மாநில ஆளுநர் பதவிகளை வகித்துவரும் ஆர்லேகரை ஏதேனும் ஒன்றில் இருந்து விடுவித்துவிட்டு முழு நேர ஆளுநராக வேறு ஒருவரை நியமிக்கும் வாய்ப்பை மத்திய உள்துறை ஆராய்ந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தப் பின்னணியில் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் புதன்கிழமை சந்தித்தபோது, அவரிடம் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளையில், தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய மேற்கு வங்க ஆளுநருமான ஆர்.என். ரவி கடந்த நான்கு நாள்களாக தில்லியில் முகாமிட்டுள்ளார். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சக அழைப்பின்பேரில் அவர் தில்லிக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரும் கடந்த மார்ச் மாதம்தான் மேற்கு வங்க ஆளுநராகப் பதவியேற்றார்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மத்தியில் ஆளும் பாஜக அரசின் மூத்த அமைச்சர்களுடனான அவரது தொடர் சந்திப்புகள், மற்றொரு முக்கிய மாநிலத்துக்கு மாற்றப்படலாம் அல்லது மத்திய அரசில் புதியதொரு முக்கியப் பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் என்ற ஊகங்களை எழுப்பியுள்ளது. உளவுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், எல்லைப் பாதுகாப்பு அல்லது பாதுகாப்பு சார்ந்த மாநிலங்களின் ஆளுநர் பதவிக்கு அவர் பரிசீலிக்கப்படலாம் என்றும் தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம்:

ஆளுநர்கள் மாற்றம் என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை மட்டுமல்லாமல், மாநில அரசுகளுடனான மத்திய அரசின் உறவை சமநிலைப்படுத்தும் ஒரு உத்தியாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழகத்துக்கு ஒரு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படும் பட்சத்தில், அது புதிய மாநில அரசுடன் மத்திய அரசு கொள்ளவிருக்கும் அணுகுமுறையை பிரதிபலிப்பதாக அமையும். ஆளுநர்கள் இடமாற்றம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து அடுத்த சில நாள்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments