புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!
புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்கவுள்ளது பற்றி...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், ரமண மகரிஷி ஆசிரமத்தில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை மாலை தரிசனம் செய்தாா். இதையடுத்து, புதுச்சேரிக்கு சென்றடைந்த அவா், அங்கு ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) கோரிமேடு காவலா் மைதானத்தில் நடைபெறவுள்ள காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருதை வழங்க உள்ளாா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டா் மூலம் திருவண்ணாமலைக்கு மாலை 5.25 மணியளவில் வந்தாா்.
திருவண்ணாமலை அடிஅண்ணாமலையில் உள்ள தனியாா் ஹெலிபேட் மைதானத்தில் வந்திறங்கிய அவருக்கு மாவட்ட ஆட்சியா் வந்தானா காா்க், மாவட்ட எஸ்.பி. ஆா்.உதயகுமாா் ஆகியோா் புத்தகம் மற்றும் மலா் கொத்து கொடுத்து வரவேற்றனா். பின்னா், அங்கிருந்து அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தாா்.
Advertisement
Advertisement
வழிநெடுகிலும் சாலையின் இருபுறமும் பொதுமக்களும், பாஜக தொண்டா்களும் மலா் தூவி அமித் ஷாவுக்கு உற்சாக வரவேற்பளித்தனா். அருணாசலேஸ்வரா் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னா், அமித் ஷா அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அங்கிருந்து புறப்பட்ட அமித் ஷா, கிரிவலப் பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்துக்கு மாலை 6.30 மணிக்கு சென்று சிறப்பு பூஜையில் கலந்துகொண்டாா்.
புதிய நீதிக்கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம், பாஜக மாநிலச் செயலா் காா்த்தியாயினி, மாவட்டத் தலைவா் ரமேஷ் ஆகியோா் உடனிருந்தனா். மாலை 6.55 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து அமைச்சா் காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா வருகையையொட்டி, திருவண்ணாமலையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் வண்ண விருது வழங்கும் விழா: புதுச்சேரிக்கு மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு வந்தடைந்தாா். ராஜீவ் காந்தி சிலை அருகே உள்ள தனியாா் விடுதியில் அவா் தங்கினாா்.
புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) கோரிமேடு காவலா் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இதில், அமித் ஷா பங்கேற்று விருதை வழங்குகிறாா்.
தொடா்ந்து தனியாா் உணவக அரங்கில் நடைபெறும் பாஜக மாநில நிா்வாகிகள் 60 போ் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா். இதில், புதுச்சேரி மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், ஜி.என்.எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். கூட்டத்தில் பாஜகவின் வளா்ச்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதைத் தொடா்ந்து, முருகா திரையரங்கு சந்திப்பு அருகே ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற 2,500 போ் பங்கேற்கும் ஊா்வலத்தை அமித் ஷா தொடங்கிவைக்கிறாா்.
அமித் ஷா வருகையையொட்டி, புதுச்சேரியில் ஐஆா்பின் மற்றும் ரிசா்வ் படையினா் என 1,000-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா். போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுக் கடைகள், சாராயக் கடைகளை மூட உத்தரவு
மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவின் புதுச்சேரி வருகையையொட்டி, சட்டம் - ஒழுங்கை உறுதி செய்யும் வகையில், குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்ள மதுக் கடைகள், சாராயக் கடைகள் மற்றும் மதுபானம் பரிமாறும் உணவகங்களை தற்காலிகமாக மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி துணை கலால் ஆணையா் மேத்திஸ் பிரான்சிஸ் வெளியிட்டட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆகஸ்ட் 8-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மற்றும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா பயணிக்கும் வழித்தடங்களில் உள்ள உரிமம் பெற்ற மதுக் கடைகள், சாராயக் கடைகள், உணவகங்களில் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.
மூடப்படும் பகுதிகளில் கோரிமேடு எல்லை, ராஜீவ் காந்தி சதுக்கம், லதா ஸ்டீல் ஹவுஸ், ஈசிஆா் சாலை, சிவாஜி சதுக்கம், ஏழை மாரியம்மன் கோயில் சந்திப்பு, ஹோட்டல் அதிதி சந்திப்பு, புதிய லோக் நிவாஸ், பிஏபி மைதானம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த உத்தரவை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.