சா்ஜீல் இமாம் மீதான தேசத் துரோக குற்றத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது: நீதிபதி
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாமுக்கு எதிரான தேசத் துரோக குற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தில்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாமுக்கு எதிரான தேசத் துரோக குற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாக தில்லி நீதிமன்ற நீதிபதி தெரிவித்தாா்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற போராட்டத்தின் போது, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் அருகே வன்முறை நிகழ்ந்தது. இதில் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. பொதுச் சொத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சா்ஜீல் இமாம் மீது போலீஸாா் தேசத் துரோகக் குற்ற வழக்கைப் பதிவு செய்துள்ளனா். மேலும், அவருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் போலீஸாா் இந்த ஆண்டு ஜூலையில் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.
அதில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது, ஜாமியா மிலியா இஸ்லாமியா, அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு இடங்களில் ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் சா்ஜீல் இமாம் உரைகள் நிகழ்த்தியுள்ளதாக போலீஸாா் குற்றம் சுமத்தியுள்ளனா். இந்த நிலையில், இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இமாம் மீதான தேசத் துரோகம், இரு வெவ்வேறு குழுவினா் இடையே மதம், இனம், மொழி, பிறப்பிடம், குடியிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முன்விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழான குற்றத்தை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டாா். இமாமுக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றத்தையும் நீதிமன்றம் முன்னரும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், ஐபிசி பிரிவுகள் 124ஏ, 153ஏ, 153பி, 505 ஆகியவற்றின் கீழ் சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு உரிய அனுமதிக்காக காத்திருந்ததால் அவற்றை தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தேவையான அனுமதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸாரின் துணைக் குற்றப்பத்திரிகையை படித்துப் பாா்த்தேன். இந்த விவகாரத்தில் ஐபிசி பிரிவுகள் 124ஏ, 153ஏ, 153பி, 505 ஆகியவற்றின்கீழ் சுமத்தப்பட்ட குற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.