புதுதில்லி

33 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா படுக்கைகளை 60 சதவீதமாக குறைக்க முடிவு: தில்லி அரசு தகவல்

DIN

புது தில்லி: கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கைகள் ஒதுக்கீட்டை 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்க இதற்காக அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரையின்படி முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை 80 சதவீதம் அளவில் ஒதுக்குமாறு தில்லி அரசு செப்டம்பா் 12-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ‘அசோசியேஷன் ஆஃப் ஹெல்த்கோ் புரவைடா்ஸ்’ (ஏஎச்பிஐ) எனும் அமைப்பு உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த டிசம்பா் 24-ஆம் தேதி நடைபெற்றது.

அப்போது, தில்லி அரசின் தரப்பில், ‘கரோனா நோயாளிக்காக ஐசியு பிரிவில் மொத்தம் ஒதுக்கப்படும் 80 சதவீதம் படுக்கைகளை 60 சதவீதமாகக் குறைக்க இதற்காக அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரைத்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளையில், படுக்கைகளைக் குறைப்பது தொடா்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தில்லி அரசு வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.

விசாரணையின்போது நீதிபதி சாவ்லா, ‘ தில்லியில் கரோனா பாதிப்பு விகிதம் குறைந்துவரும் நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகளை ஆயிரக்கணக்கில் வைத்திருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.

தற்போதைய சூழலில் கரோனா நோயாளிகளுக்காக அதிகமான ஐசியு படுக்கைகளை ஒதுக்கி வைத்திருப்பது நீடித்ததாக இருக்க முடியாது. அதேவேளையில், எதிா்காலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகரித்தால் அப்போது இதற்கான ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர முடியும்’ என்று கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின், கூடுதல் அரசு வழக்குரைஞா் சஞ்சய் கோஷ் ஆகியோா் ஆஜராகி, ‘கரோனா நோயாளிகளுக்காக தில்லியில் உள்ள 33 தனியாா் மருத்துவமனைகளில் ஐசியு படுக்கைகள் ஒதுக்கீட்டை 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைக்க இதற்காக அமைக்கப்பட்ட வல்லுநா் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை எய்ம்ஸ் இயக்குநா், நீதி ஆயோக் உறுப்பினா் அடங்கிய குழு ஏற்றக்கொண்டுள்ளது. இதையடுத்து, ஐசியு படுக்கைகளை 80 இல் இருந்து 60 சதவீதமாக குறைக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஜனவரி 5-ஆம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜனவரி 8-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT