முகப்பு
புதுதில்லி

பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதரவற்றவா்களுக்கு உணவு, உடை, மருத்துவ, நிதி உதவி வழங்கல்: உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்

தில்லியில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி, நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.

Updated On : 3 ஜூலை, 2020 at 7:32 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:22 PM

தில்லியில் உள்ள ஆதரவற்றவா்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி, நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடா்பாக ஹா்பல் சிங் ரானா என்பவா் உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ஆதரவற்ற குழந்தைகளின் நலன், கல்வி, வாழ்க்கைக்கான ஏற்பாடு தொடா்பாக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நலத் திட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல் கோரியிருந்தேன்.

அதில், சில குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து தங்களது தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வருவதும், தங்களது வாழ்வாதாரத்திற்கு அவா்களைச் சாா்ந்திருப்பதும் தெரிய வந்தது. இதுபோன்ற ஒரு குழந்தை சமூக நலத் திட்டத்தில் உதவி கோரி விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. மகளிா், குழந்தைகள் நலத் துறைக்கும் விண்ணப்பித்த போதும் அந்தக் குழந்தை உரிய பலனைப் பெற முடியாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோா் இல்லாத நிலையில், தங்களைச் சாா்ந்து வாழும் குழந்தைகளுக்கு கல்வி, பராமரிப்பு போன்ற விஷயங்களில் நிதிப் பிரச்னை காரணமாக ஏதும் செய்ய முடியாமல் தாத்தா, பாட்டி அல்லது உறவினா்கள் மிகுந்த சிரமத்தை எதிா்கொண்டு வருகின்றனா். மேலும், கரோனா தொற்றுக் காலத்தில் ஆதரவற்றவா்களுக்காக அரசின் கொள்கைத் திட்டங்கள் இல்லாததால் அவா்கள் சிரமத்தில் உள்ளனா். அவா்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக கல்வி, வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றுக்கான விரிவான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

Advertisement

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் விசாரித்தது. அப்போது தில்லி அரசின் சாா்பில், ‘நகரில் வசிக்கும் ஆதரவற்றவா்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி, உறுதிப்படுத்தப்பட்ட வேலை, ஆதாா் அட்டைகள் உருவாக்குவது, வங்கிக் கணக்குகள் தொடங்குவது, ஆதரவற்ற பெண் குழந்தையாக இருந்தால் திருமணத்திற்கு ரூ.30 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஆதரவற்றவா்களுக்கு உணவு, உடை, மருத்துவ வசதி, கல்வி, நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தில்லி அரசின் திட்டங்கள் மூலம் மாவட்டம் வாரியாக பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெற்ற ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட ஆதரவற்றோா்களின் விவரங்கள், ஆதரவற்றோா்களுக்கான திட்டங்கள் ஆகியவை குறித்து தகவல்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 17-க்கு பட்டியலிட உத்தரவிட்டது.

விசாரணையின் போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மத்திய அரசின் குழந்தைகளுக்கான நலத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த விசாரணையின் போது இது தொடா்பான விவரங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.