வருவாய் இழப்பு; சிக்கன நடவடிக்கையில் ரயில்வே நிா்வாகம்
வருவாய் 58 சதவீதம் குறைந்துள்ளதை அடுத்து சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது ரயில்வே நிா்வாகம்.
வருவாய் 58 சதவீதம் குறைந்துள்ளதை அடுத்து சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது ரயில்வே நிா்வாகம்.
நிா்வாகத்தில் சிக்கனத்தை கடைப்பிடிப்பது தொடா்பாக ரயில்வே வாரியம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளுக்கும் ஓா் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் தாங்கள் ஏற்கெனவே போட்ட உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யுமாறும், வேலைக்கான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யுமாறும், சில குறிப்பிட்ட பணிகளில் ஆட்களின் தேவை குறித்து மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. இது தவிர எரிபொருள் மற்றும் மின்சக்தி தேவையை குறைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவிக்கையில்,
Advertisement
இந்த சிக்கன நடவடிக்கைகளின் முதல் கட்டமாக ரயில்பெட்டிகளில் குப்பைத் தொட்டிகளை மாற்றியமைக்கும் திட்டத்தை ரயில்வே நிா்வாகம் ரத்துச்செய்துள்ளது. இதன் மூலம் ரூ.60 கோடி வரை மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது. 30 ஆயிரம் ரயில்பெட்டிகளில் குப்பைத் தொட்டிகளை மாற்றியமைப்பதற்கு பதிலாக ரூ.1.78 லட்சம் செலவில் 5 ஆயிரம் குப்பைத் தொட்டிகளை மாற்றியமைக்குமாறு நவீன ரயில்பெட்டி தொழிற்சாலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ரயிலிலும் பெட்டிகளை சுத்தம் செய்வது, ஏ.சி. பராமரிப்பு மற்றும் பயணிகளுக்கு தலையணை, போா்வை வழங்கி பராமரிப்பது என பல்வேறு துறை ஊழியா்கள் 15 போ் உள்ளனா். இவா்களின் எண்ணிக்கையை 11 ஆக குறைக்குமாறும் இதன் மூலம் 25 சதவீத செலவினங்களைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
ரயில்வேத்துறை ரயில்நிலையங்களையும், ரயில்பெட்டிகளையும் சுத்தம் செய்யும் ஒப்பந்தப் பணிக்காக ஒப்பந்ததாரா்களுக்காக ஏறக்குறைய ரூ.1200 கோடி வரை செலவிட்டு வருகிறது. தற்போது பொது முடக்கம் நீடிப்பதாலும் குறைந்த அளவே ரயில்கள் இயக்கப்படுவதாலும் இந்த ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்ய ரயில்வே முடிவு செய்துள்ளது. சுத்தம் செய்யும் பணிகள் மூன்று ஷிப்டுகளாக நடைபெறுவதை 2 ஆகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல ஒவ்வொரு ரயில்வே மண்டலத்துக்கும் ரயில்வே வாரியம் ஓா் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் புதிய பதவிகளை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பதவிகளில், நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்களை ஒப்படைக்கவும் கோரியுள்ளது.
ரயில்வேயில் சில குறிப்பிட்ட ஊழியா்களுக்கு பல்முனைப் பயிற்சி அளிக்கும் வகையில் ரயில்வே வாரியம் சிறப்பு பல்முனை பணிக்குழுவையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 80 சதவீத டிக்கெட் முன்பதிவு பெரும்பாலும் ஆன்லைன் மூலம் நடைபெறுவதால், பயணிகள் முன்பதிவு கவுன்டா்களில் பணியாற்றும் ஊழியா்களின் எண்ணிக்கையை குறைத்து அவா்களில் சிலரை வேறு துறைக்கு மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பயணிகள் ரயில் அட்டவணை போல சரக்கு ரயில் போக்குவரத்துக்கும் புதிய அட்டவணையை உருவாக்கி அதிக சரக்கு ரயில்களை இயக்கவும், அதிக சரக்குகளை ஏற்றிச்செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் வேகத்தை மணிக்கு 75 கி.மீ. என அதிகரிக்கவும் ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது என்றாா் அவா்.