முகப்பு
புதுதில்லி

கருக்கலைப்புக்கு அனுமதி கோரிய பெண்ணின் மனு: எய்ம்ஸ் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

அசாதாரணமான அமைப்பு கொண்ட 23 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசும், எய்ம்ஸ்

Updated On : 11 ஜூலை, 2020 at 4:38 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

அசாதாரணமான அமைப்பு கொண்ட 23 வாரக் கருவைக் கலைக்க அனுமதி கோரி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனு மீது தில்லி அரசும், எய்ம்ஸ் மருத்துவமனையும் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மருத்துவப் பரிசோதனைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அணுகுமாறும் நீதிபதிகள் மனுதாரரான பெண்ணுக்கு அறிவுறுத்தினா்.

இது தொடா்பாக பெண் ஒருவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், ‘எனது வயிற்றில் வளரும் 23 வாரக் கரு அசாதாரண அமைப்புடன் உள்ளது. அதன் இதயம், மண்டை ஓடும் ஆகியவற்றிலும், மூளையிலும் பிரச்னை உள்ளது. இது அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தநிலையில், இந்தக் கருவை தொடர அனுமதித்தால் அது கருவைத் தாங்கும் எனக்கு உடல் அளவிலும், மனத்தளவிலும் பாதிப்பு ஏற்படும் என்று தெரியவருகிறது. ஆகவே, கருவைக் கலைப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசும், எய்ம்ஸ் மருத்துவமனையும் தங்களது நிலைப்பாட்டை ஜூலை 13-க்குள் பதிலாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும், மனு மீதான விசாரணையை ஜூலை 14-க்கு ஒத்திவைத்தது.

மேலும், கருவின் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஒரு வல்லுநா்கள் குழுவை அமைக்கும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.