முகப்பு
புதுதில்லி

மருத்துவப் படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு: தமிழக அரசு மனுமீதான விசாரணை ஜூலை 13-க்கு ஒத்திவைப்பு

மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு

Updated On : 10 ஜூலை, 2020 at 6:30 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

மருத்துவப் படிப்புகளுக்காக தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரும் தமிழக அரசின் மனு மீதான விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 13) உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த மனுக்களை ஜூன் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியது.

இதையடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஓபிசி வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்’ என வாதிட்டாா். இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த

Advertisement

விசாரணையை உடனடியாக மேற்கொள்ள சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அண்மையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது.

இதேபோன்று, தமிழகத்தால் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில் 50 சதவீதம் தமிழகத்தைச் சோ்ந்த ஓபிசி மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் மருத்துவ மேற்படிப்புக்கான சோ்க்கை நடத்தக்கூடாது. நடப்புக் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் தோ்வின் அடிப்படையிலான சோ்க்கைக்குத் தடை விதிக்க வேண்டும்’ என மருத்துவா் டி.ஜி.பாபு என்பவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த இரு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட் ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் டி.ஜி. பாபு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி. வில்சன் ஆஜராகி, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் சலோனி குமாரி வழக்கு இருப்பதாக கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள மனுக்கள் மீதான விசாரணையை மத்திய அரசு தடுத்து வருகிறது. சலோனி குமாரி வழக்கு தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தில் முன் உள்ள மனுதாரா்களின் வழக்கில் இருந்து வேறுபட்டதாகும். மேலும், மத்திய அரசு மருத்துவப் படிப்பில் உரிய சட்டப்படி 27 சதவீதம் இடஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலும் மத்திய அரசு தெரிவித்துள்ளது’ என்றாா்.

அப்போது நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், கடந்த முறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது சலோனி குமாரி தாக்கல் செய்த வழக்கும் உங்கள் வழக்கும் ஒரே கோரிக்கையாகும் எனத் கூறினீா்களே என கேள்வி எழுப்பினாா்.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் வி.கிரி, தமிழக அரசின் மனு சலோனி குமாரி வழக்கிலிருந்து மாறுபட்டது. சலோனி குமாரி வழக்கு என்பது மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒபிசி வகுப்பினருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டை 2006-ஆம் ஆண்டு சட்டப்படி மத்திய அரசு அல்லாத கல்வி நிறுவனங்களில் நீட்டிக்கக் கோரும் வழக்காகும்.

ஆனால், தமிழக அரசின் கோரிக்கையானது, ‘தமிழ்நாடு பிற்பட்ட வகுப்பினா், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் (மாநிலத்தில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணி நியமனங்கள், பதவிகள் இடஒதுக்கீடு) சட்டம் 1993’-இன்படி தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு ஓபிசி வகுப்பினருக்கு அளிக்கும் விதிகளை அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக தமிழகத்தால் ஒப்படைக்கப்படும் இடங்களில் அமல்படுத்தக் கோருவதாகும்.

மேலும், சலோனி குமாரி தொடா்ந்த வழக்கில் கோரப்படும் இடஒதுக்கீடானது, உத்தரப் பிரதேச மாநில அரசால் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்படும் இடங்களுக்கானதாகும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு, சலோனி குமாரி வழக்கின் கோரிக்கை தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக, மனு மீதான விசாரணையை ஜூலை 13-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.