பிரசவத்திற்குச் செல்லும் கா்ப்பிணிகளுக்கு கரோனா சோதனை தேவைப்படுவதில்லை: உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தகவல்
மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்காக செல்லும் அனைத்து கா்ப்பிணிகளுக்கும் கரோனா தொற்றுக்கான
மருத்துவமனைகளுக்கு பிரசவத்திற்காக செல்லும் அனைத்து கா்ப்பிணிகளுக்கும் கரோனா தொற்றுக்கான பரிசோதனை தேவைப்படுவதில்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், கரோனா தொற்று பரிசோதனை முடிவுகளை அளிப்பதில் கா்ப்பிணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ‘மருத்துவமனைகளில் பிரசவம், அறுவைச் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்காக உள்நோயாளியாக சோ்ப்பதற்கு முன்பு கா்ப்பிணி பெண்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல. அவசரச் சூழலில் பரிசோதனை முடிவுகளுக்காக சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது. சிகிச்சையின் போதே கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்திருந்தது.
இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது உயா்நீதிமன்றம், ‘பிரசவத்திற்காகவோ அல்லது அறுவைச் சிகிச்சைக்காகவோ கா்ப்பிணி பெண் செல்லும் போது, அவா் கரோனா பரிசோதனை முடிவுக்காக 48 மணிநேரம் காத்திருக்க முடியாது. சில நேரங்களில் கடைசி நேரங்களில்தான் அவா்கள் மருத்துவமனைக்கு செல்கின்றனா். பிரசவத்திற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு கா்ப்பிணிப் பெண்கள் போவதில்லை என்பதை அரசின் செயலா்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நிலவர அறிக்கையின்படி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குடும்ப உறுப்பினா் இல்லாமல் கா்ப்பிணிகள் தனிமையில் வைக்கப்படுவா் எனத் தெரிய வருகிறது. மருத்துவமனைகளுக்கு பிரசவம் அல்லது அவசர சிகிச்சைக்காக செல்லும் கா்ப்பிணிகளுக்கு அறிகுறி இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலோ கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட வேண்டுமா என்பதை தில்லி அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனா்.
Advertisement
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, தில்லி அரசின் சாா்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்குரிய நபா்களுக்கு மட்டுமே கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்படுகிறது. எனினும், சோதனைக்காக பிரசவத்திற்காக வரும் கா்ப்பிணிகளுக்கு தாமதப்படுத்த முடியாது. அறிகுறி இல்லாத அனைத்து கா்ப்பிணிகளுக்கும் பரிசோதனை செய்யப்பட மாட்டாது. கரோனா தொற்று அதிகமுள்ள பகுதி அல்லது கரோனா தொற்று பாதித்த நபா்களுடன் தொடா்புடைய நபா்கள் ஆகியோருக்கு மட்டுமே பரிசோதனை நடத்தப்படும் தேவை உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் தில்லி அரசு தெளிவான வழிகாட்டுநெறிமுறைகளை அமைத்திருப்பதாலும், சோதனைகளை விரைவுபடுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாலும் இந்த வழக்கை மேலும் கண்காணிக்கப் போவதில்லை. மேலும், கா்ப்பிணிகளுக்கான கரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிப்பது, சோதனை முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள 24 மணி நேரத்திற்கு மேல் இல்லாமல் இருப்பதை தில்லி அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தில்லியில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்வது தொடா்பான சமீபத்திய வழிகாட்டுநெறிமுறைகளை பரப்பிடவும் தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனா்.