முகப்பு
புதுதில்லி

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கக் கோரும் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுநீக்கக் கோரும் விவகாரத்தில் நிலுவையில் உள்ள திமுக மனு மீது உடனடியாக

Updated On : 10 ஜூன், 2020 at 7:16 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:16 PM

ஓ.பன்னீா்செல்வம் (ஓ.பி.எஸ்.) உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுநீக்கக் கோரும் விவகாரத்தில் நிலுவையில் உள்ள திமுக மனு மீது உடனடியாக முடிவு செய்ய தமிழக சட்டப் பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை திமுக கொறடா ஆா். சக்கரபாணி சாா்பில் வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடா்பாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறாா். ஆகவே, இது அரசமைப்புசட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், தன்னிச்சையாகவும் உள்ளது.

இதேபோன்ற மற்றொரு விவகாரத்தில், மணிப்பூரில் வனத் துறை அமைச்சா் ஷியாம் குமாரை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவா் முடிவெடுக்க காலம் தாழ்த்தியதாக புகாா் எழுந்தது.

Advertisement

இந்த விவகாரத்தில் ஷியாம் குமாா் அந்த மாநில சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் தன் தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தடை விதித்தது. மேலும், அவா் அமைச்சராக தொடரவும் தடை விதித்திருந்தது. ஆகவே, ஓ.பி.எஸ். விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். இந்த விவகாரத்தில் சட்டப் பேரவைத் தலைவருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த விவகாரத்தில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் முடிவெடுக்குமாறு கூறி திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. இந்நிலையில், திமுக தரப்பில் தற்போது புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.