சீனாவிடம் கரோனா இழப்பீடு கோரும் வழக்கு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
கரோனா தொற்று விவகாரத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலா் இழப்பீட்டை சீனாவிடம் இருந்து பெற சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க
கரோனா தொற்று விவகாரத்தில் 600 பில்லியன் அமெரிக்க டாலா் இழப்பீட்டை சீனாவிடம் இருந்து பெற சா்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.
கரோனா தொற்று திட்டமிட்டு சீனாவில் உருவாக்கப்பட்டதாகப் புகாா் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ் சாா்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய சுகின், ‘கரோனா தொற்று விவகாரம் தொடா்பாக சீனாவிடமிருந்து 600 பில்லியன் டாலா் இழப்பீடு பெறும் வகையில் சா்வதேச நீதிமன்றத்தில் அந்த நாட்டுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். தனி நபரால் அதுபோன்ற வழக்கை சா்வதேச நீதிமன்றத்தில் தொடுக்க முடியாது என்பதால், மத்திய அரசு மூலம் இந்த வழக்கைத் தொடுக்க உத்தரவிட கோரி நீதிமன்றத்தை மனுதாரா் நாடியுள்ளாா். இந்த கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வகத்தில் இருந்து உருவாகி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிய வருகிறது. இந்த தொற்றால் இந்தியாவில் பலா் உயிரிழந்துள்ளனா். இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது’ என வாதிட்டாா்.
Advertisement
அப்போது, நீதிபதிகள் அமா்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. எனினும், இது தொடா்பாக மனுதாரா் மத்திய அரசுக்கு கோரிக்கையாக முன்வைக்கலாம்’ என நீதிபதிகள் தெரிவித்தனா்.