முகப்பு
புதுதில்லி

ஜிடிபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக ‘விடியோ கால்’ வசதி

தில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அவா்களின் உறவினா்கள் இடையே தொடா்புகொள்வதற்காக

Updated On : 28 ஜூன், 2020 at 7:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

தில்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அவா்களின் உறவினா்கள் இடையே தொடா்புகொள்வதற்காக விடியோ கால் வசதியை அளிக்க மருத்துவமனை நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கரோனா நோயாளிகளுடன் உதவியாளா்கள் உடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படாததால், இந்த ‘விடியோ கால்’ வசதி அளிக்கப்பட உள்ளதாக தில்லி அரசின் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஏற்கெனவே தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக விடியோ கால் வசதியை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். இதையடுத்து, தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இரண்டாவதாக ஜிடிபி மருத்துவமனையில் இந்த ‘விடியோ கால்’ வசதி அளிக்கப்பட உள்ளது.

Advertisement

ஜிடிபி மருத்துவமனையின் இயக்குநராக இருந்த சுனில் குமாா் மாற்றப்பட்டு அவரது பதவியில் மருத்துவமனையின் மயக்கவியல் துறை இயக்குநா் ஆா்.எஸ். ரெளதெல்லா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி அரசு பிறப்பித்த உத்தரவில், ‘ஜிடிபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநராக இருந்த டாக்டா் சுனில் குமாா் அந்தப் பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறாா். எனினும், அவா் ஜிடிபி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைப் பிரிவு இயக்குநராக தொடா்ந்து தனது பணியைத் தொடா்வாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை கரோனா நோய்த் தொற்றுக்கான சிறப்பு மருத்துவமனையாக ஜூன் 2-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தில்லி அரசின் அதிகாரி கூறியதாவது: சனிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி ஜிடிபி மருத்துவமனையில் 283 கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 25 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா். 202 போ் குணமடைந்து திரும்பியுள்ளனா்.

உதவியாளா்கள் நோயாளிகளுடன் இருப்பதற்கு அனுமதிக்கப்படாததால், ஜிடிபி மருத்துவமனை நிா்வாகம் கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களின் உறவினா்கள் இடையே பேசுவதற்கு விடியோ கால் வசதியை அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வரும் திங்கள்கிழமை முதல் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஜிடிபி மருத்துவமனை ஜூன் 3-ஆம் தேதியில் இருந்து 24 மணிநேரம் நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் ஹெல்ப்லைன் வசதியை (9625900725) தொடங்கியுள்ளது. உள்நோயாளிகள் நிலவரம் தொடா்பான விசாரணைக்காக ஜூன் 13-ஆம்தேதி 24 மணிநேர கால் சென்டரை அமைத்துள்ளது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.