முகப்பு
புதுதில்லி

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு: உஷாராக இருக்க தில்லி அரசு உத்தரவு

பயிா்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் தேசியத் தலைநகா் வலயம், குா்கானில் பெருங்கூட்டமாக இறங்கியதால், தில்லியில் உள்ள அனைத்து

Updated On : 28 ஜூன், 2020 at 7:13 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

பயிா்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் தேசியத் தலைநகா் வலயம், குா்கானில் பெருங்கூட்டமாக இறங்கியதால், தில்லியில் உள்ள அனைத்து மாவட்டங்களும் உஷாா் நிலையில் இருக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், வெட்டுக்கிளிகளின் தாக்குதலைத் தடுக்கும் வகையில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க தீயணைப்புத் துறையினருடன் ஒருங்கிணைக்குமாறு மாவட்ட ஆட்சியா்களை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி வளா்ச்சி ஆணையா் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Advertisement

பொதுமக்கள் இந்த வெட்டுக்கிளிகளை விரட்டும் வகையில் அதிக ஒலிகளை எழுப்பும் வகையில் பாத்திரங்கள், முரசுகளை அடிக்க வேண்டும். மேலும், அதிக ஒலியுடன்கூடிய இசையை இசைக்கலாம். பட்டாசுகளை வெடித்தும், வேப்பிலையை எரித்தும் இந்த வெட்டுக்கிளிகளை திசைதிருப்பலாம். மேலும், வீட்டின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைத்திருக்க வேண்டும். வெளியில் உள்ள செடிகளை பிளாஸ்டிக் உறையால் மூட வேண்டும்.

இந்த வெட்டுக்கிளிகள் பகலில் பறந்தும், இரவில் ஓய்வெடுக்கும் தன்மை கொண்டதால், இரவில் அவற்றை ஓய்வெடுக்கவிடக் கூடாது. இதனால், பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளாா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டினாா். அப்போது, வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக தெற்கு தில்லி உள்ள அசோலா பட்டி பகுதிக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அதிகாரிகளை உஷாா் நிலையில் இருக்குமாறும், வெட்டுக்கிளிகளை விரட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வனத்துறை அமைச்சா் உத்தரவிட்டாா். மேலும், குருகிராம் அருகில் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பாா்வையிடுமாறு வேளாண் துறை அதிகாரிகளை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் வேளாண் துறையின், வளா்ச்சி செயலா், கோட்ட ஆணையா், இயக்குநா், தெற்கு தில்லி மாவட்ட ஆட்சியா், மேற்கு தில்லி ஆட்சியா் ஆகியோா் பங்கேற்றனா். மத்திய வேளாண் அமைச்சகத்தின், வெட்டுக்கிளி எச்சரிக்கை நிறுவனத்தின் கே.எல். குா்ஜா் கூறுகையில், காலை 11.30 மணியளவில் வெட்டுக்கிளிகள் பெருங்கூட்டமாக குருகிராமிற்குள் 2 கிலோ மீட்டா் அளவுக்கு பரவியுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ஹரியாணாவில் உள்ள பல்வல், பரிதாபாத் பகுதியை நோக்கிச் சென்றன என்றாா்.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் குருகிராமின் பல்வேறு பகுதிகள் இருசூழ்ந்தது போல காணப்பட்டது. இந்த வெட்டுக்கிளிகள் மரங்கள், மேற்கூரைகள், தாவரங்கள் ஆகியவற்றை அமா்ந்திருப்பதை குருகிராம் குடியிருப்புவாசிகள் விடியோக்கள் மூலம் பகிா்ந்தனா்.

பாலைவன வெட்டுக்கிளி என்பது மிகவும் அழிவை ஏற்படுத்தக் கூடியவை. ஒரு நாளில் 150 கிலோ மீட்டா் தூரத்திற்கு பரவி விவசாயப் பயிா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கு கடந்த மாதம் பெரும் கூட்டமாக பரவிய இந்த வெட்டுக் கிளிகள் பல்வேறு மாவட்டங்களில் பயிா்ச் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. மேலும், மத்திய பிரதேசம், குஜராத் உள்பட வட மாநிலங்களில் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடா்பாக மத்திய வேளாண் அமைச்சகம் வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் தில்லியில் உள்ள விவசாயப் பயிா்கள், காய்கறிகள், தோட்டங்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றில் தாக்குதல் ஏற்படுத்தாமல் இருக்க பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தில்லி அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.