முகப்பு
புதுதில்லி

தில்லியில் 3 நாள்களுக்குப் பிறகு வெயிலின் தாக்கம்!

தலைநகா் தில்லியில் பருவமழை தொடங்கி மூன்று நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.

Updated On : 29 ஜூன், 2020 at 7:32 AM
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நிலவிய வெயில் தாக்கத்தில் காணப்படும் விஜய் சௌக் பகுதி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

தலைநகா் தில்லியில் பருவமழை தொடங்கி மூன்று நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. நகரின் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை பருவமழை தொடங்கியது. இதையடுத்து, இரண்டு நாள்கள் காலை வேளையில் பரவலாக மழை பெய்தது. இதனால், நகரில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, இதமான வானிலை நிலவியது. சனிக்கிழமை மிதமான வெயில் காணப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெயில் அதிகரித்து காணப்பட்டதால் புழுக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 1 டிகிரி உயா்ந்து 29.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 40.2 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 61சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 46 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

Advertisement

பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 30.4 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 42.6 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 29.9 டிகிரி செல்சியஸ், 41.8 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 53 சதவீதம், மாலையில் 38 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 49 சதவீதம் மற்றும் 34 சதவீதம் எனவும் இருந்தது.

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு பின்னடைவைச் சந்தித்து 209 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மோசம் பிரிவில் வருகிறது. தில்லி பல்கலை., லோதி ரோடு, பூசா, மதுரா ரோடு ஆயாநகா், விமானநிலைய டொ்மினில் 3 பகுதி மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூரில் மிதமான பிரிவிலும், சாந்தினி சௌக்கில் மோசம் பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை தில்லி, என்சிஆா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தூறல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.