முகப்பு
புதுதில்லி

கரோனா சிகிச்சைக்காக பில்ரோத் மருத்துவமனையை பயன்படுத்த தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் தனியாா் மருத்துவமனையின் மேல்பகுதியின் நான்கு தளங்களை கரோனா நோயாளிகளுக்கு

Updated On : 28 மே, 2020 at 4:35 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் தனியாா் மருத்துவமனையின் மேல்பகுதியின் நான்கு தளங்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.

சென்னை அமைந்தகரை பகுதியில் 8 மாடிகள் கொண்ட பில்ரோத் மருத்துவமனை உள்ளது. இதில் விதிகளை மீறி, முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 5 தளங்களை இடிக்குமாறு தமிழக அரசு, சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பில்ரோத் மருத்துவமனை மேல்முறையீடு செய்தது.

அதில், ‘தளங்கள் ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசின் 2017-ஆம் ஆண்டு கட்டட ஒழுங்குமுறை திட்டத்தின் கீழ் பில்ரோத் மருத்துவமனை விண்ணப்பித்துள்ளது. 2005-2006-இல் இருந்து மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக பில்ரோத் மருத்துவமனையின் விண்ணப்பம் மீது அதிகாரிகள் ஒரு மாதத்தில் முடிவு செய்ய முடியும்’ என தெரிவித்திருந்தது.

Advertisement

பில்ரோத் மருத்துவமனையின் மேல்முறையீட்டு மனுவை கடந்த ஆண்டு ஜூன் 3-இல் விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு, கட்டுமான ஒப்புதல் விதிமீறல் காரணமாக அந்த மருத்துவமனையின் 5 தளங்களை இடிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், ஐந்து தளங்களையும் மருத்துவமனை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, பில்ரோத் மருத்துவமனையின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.கே. கெளல், ‘கரோனா தொற்று காணப்படும் இச்சூழலில் மருத்துவமனையின் பயன்படுத்தப்படாமல் உள்ள தளங்களை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதுபோன்ற நோயாளிகளுக்கு 150 படுக்கைகள் ஒதுக்கப்படும்’ என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘கரோனா தொற்றின் தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக உள்நோயாளிகள் படுக்கை வசதி தமிழகத்திற்கு தேவைப்படுகிறது எனும் அடிப்படையில், பில்ரோத் மருத்துவமனையின் மேல் பகுதியில் நான்கு தளங்களை (4 -7) கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பில்ரோத் மருத்துவமனை உள்பட எந்த முகமையின் சேவைகளையும் தமிழ்நாடு அரசு பயன்படுத்திக்கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.