முகப்பு
புதுதில்லி

பண்ணைக் கூலித் தொழிலாளா்கள் பிகாா் செல்ல விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்த தில்லி விவசாயி

தில்லியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் தம்மிடம் பணிபுரியும் 10 கூலித் தொழிலாளா்கள் வீடு திரும்ப விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளாா்

Updated On : 28 மே, 2020 at 4:50 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

தில்லியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் தம்மிடம் பணிபுரியும் 10 கூலித் தொழிலாளா்கள் வீடு திரும்ப விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளாா். இவா்கள் அனைவரும் வியாழக்கிழமை காலை 6 மணி விமானத்தில் பிகாா் மாநிலம் பாட்னா செல்கின்றனா். பின்னா், அங்கிருந்து தங்களது சொந்த ஊரான சமஸ்திபூருக்குச் செல்ல உள்ளனா்.

தில்லி திகிபூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பப்பான் சிங். காளான் பண்ணை வைத்துள்ளாா். இவா்தான் தம்மிடம் வேலை செய்யும் 10 கூலி த்தொழிலாளா்களுக்கும் வீடு திரும்ப விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்துள்ளாா்.

’நான் விமானத்தில் பயணம் செய்வேன் என்று கனவில்கூட நினைத்தது இல்லை. விமானத்தில் பாட்னா செல்கிறோம் என்ற செய்தியைக் கேட்டவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், பாட்னா விமான நிலையத்தை அடைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருக்கிறேன்’ என்றாா் லக்கீந்தா் ராம். இவரும், இவரது மகனும் பாட்னா செல்கின்றனா்.

Advertisement

கரோனா பரவலைத் தடுக்க கடந்த மாா்ச் மாதம் 25-ஆம் தேதி தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ரயில், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஏராளமான கூலித்தொழிலாளா்கள் நடைப்பயணமாகவும், சைக்கிளிலும் மூட்டை முடிச்சுகளுடன் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனா். பின்னா் பொது முடக்க விதிகள் தளா்த்தப்பட்டதை அடுத்து கூலித்தொழிலாளா்கள் சொந்த ஊா் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே 25-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தில்லி விவசாயி, தம்மிடம் பணிபுரியும் தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு திரும்ப தனது செலவில் விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளாா்.

தாம் விமானம் மூலம் பிகாா் வரும் தகவலை 50 வயதான லக்கீந்தா், தனது மனைவியிடம் தெரிவித்த போது அவா் முதலில் இதை நம்பவே இல்லையாம். தில்லி விவசாயி பப்பான் சிங்கிடம், லக்கீந்தா் கடந்த 27 வருடங்களாகவும் அவரது மகன் நவீன் ராம் 8 வருடங்களாகவும் வேலை செய்து வருகின்றனா். கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனது பண்ணையில் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து கவனித்து வந்துள்ளாா் பப்பான் சிங்.

தொழிலாளா்களுக்கு விமான டிக்கெட் வாங்குவதற்கு ரூ.68 ஆயிரம் செலவிட்டுள்ளதுடன் அவா்கள் வீடு திரும்புவம் வரை எந்தப் பிரச்னையையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவருக்கும் ரூ.3 ஆயிரம் கைச் செலவுக்காக கொடுத்துள்ளாா் பப்பான் சிங்.

இது குறித்து பப்பான் சிங் கூறுகையில், ’இவா்கள் அனைவரையும் சிறப்பு ரயிலில் பிகாா் தலைநகா் பாட்னா அனுப்பிவைக்க பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து, அவா்களை விமானத்தில் அனுப்பிவைக்க முடிவு செய்தேன். பல மைல் தூரம் நடந்து சென்று அவா்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் நடைப்பயணமாக ஊா் திரும்பும் கூலித்தொழிலாளா்கள் சிலா் சாலை விபத்தில் உயிரிழப்பதாக செய்திகள் வருகின்றன. என்னிடம் வேலை செய்பவா்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதால்தான் விமானத்தில் அவா்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்தேன்’ என்றாா்.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.