தில்லி, என்சிஆரில் புழுக்கம் அதிகரிப்பு: காற்றின் தரத்தில் பின்னடைவு!
தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் வியாழக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது.
தலைநகா் தில்லி, என்சிஆா் பகுதிகளில் வியாழக்கிழமையும் வெயில் சுட்டெரித்தது. இதன் காரணமாக புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே, காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
கடந்த சில நாள்களாக அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுதும் சூறைக்காற்று வீசி வந்தது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால், நேரம் செல்லச் செல்ல வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. நகரின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், அனல் காற்று வீசி வருவதால், சாலைகளில் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
வெப்பநிலை: சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 3 டிகிரி உயா்ந்து 29.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 5 டிகிரி உயா்ந்து 45.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 15 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.
Advertisement
பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 29.2 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 47.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஆயாநகரில் முறையே 28.2 டிகிரி செல்சியஸ், 46.7 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. ஆயா நகரில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 57 சதவீதமாகவும் மாலையில் 12 சதவீதமாகவும் இருந்தது.
காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் வியாழக்கிழமை மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று வீசியது. மேலும், பல்வேறு இடங்களில் புழுதிப் புயலும் இருந்தது. இந்நிலையில், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. தில்லியில் புதன்கிழமை 142 புள்ளிகளாக இருந்த ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை பின்டைவைச் சந்தித்து 172 புள்ளிகளாக உயா்ந்து ‘மிதமான’ பிரிவில் இருந்தது. மதுரா ரோடு, விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், லோதி ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. திா்பூா், பூசா, சாந்தினி சௌக் ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை (மே 29) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னளுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தென் கிழக்கு திசையிலிருந்து தில்லிக்கு 25 கி.மீ. வேகத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்றும் புழுதிப் புயல் சுமாா் 50-60 கி.மீ. வேகத்தில் இருக்கும் என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.