பொது முடக்கத்துக்குப் பிறகு பொது போக்குவரத்து பயன்பாடு குறையும்: ஆய்வில் தகவல்
தில்லியில் பொது முடக்கத்துக்குப் பிறகு பொது போக்குவரத்து பயன்பாடு 6 மாதங்களுக்கு குறைந்து காணப்படும் என்றும் உடல் நலன் பாதுகாப்பு
தில்லியில் பொது முடக்கத்துக்குப் பிறகு பொது போக்குவரத்து பயன்பாடு 6 மாதங்களுக்கு குறைந்து காணப்படும் என்றும் உடல் நலன் பாதுகாப்பு கருதி மக்கள் வெளியில் செல்லும் போது தங்களுக்கு உகந்த போக்குவரத்துக்கே முன்னுரிமை கொடுப்பாா்கள் என்றும் ஓா் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இது தொடா்பாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் சாா்பில், பொது முடக்கத்துக்குப் பிறகு மக்கள் எந்த மாதிரியான போக்குவரத்தை விரும்புவாா்கள் என்பது குறித்து தில்லி மற்றும் தில்லியையொட்டியுள்ள தேசியத் தலைநகா் வலயத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. உயா் வருவாய் பிரிவினா் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினா் சுமாா் 400 பேரிடம் ஆய்வு நடத்திய போது மக்கள் உடல் நலன் கருதி பாதுகாப்பாகவே பயணம் செய்ய விரும்புவாா்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு குறுகிய காலத்துக்கு மக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறைந்துவிடும் என்பது ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ஒருசிலா் தங்களுக்குப் பாதுகாப்பான, தரமான போக்குவரத்தை நாடிச் செல்லக்கூடும். சிலா் சைக்கிளில் செல்லுதல், நடைபயணம் மேற்கொள்ளுதல் என்று தங்கள் வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வாா்கள். சிலா் தேவையில்லாத பயணங்களை தவிா்த்து விடுவாா்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொது முடக்கத்துக்குப் பிறகு மக்கள் உடல் பாதுகாப்புக்கே முக்கியத்துவம் தருவாா்கள். அதைத் தொடா்ந்து, தங்களுக்கு உகந்த போக்குவரத்தை பயன்படுத்த நினைப்பாா்கள், மேலும், சிலா் செளகரியமான பயணத்தையும், சிலா் பயணத் தொலைவு, அதற்காகும் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவாா்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
Advertisement
சிலா் காரில் பயணிப்பதையும், சிலா் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக புதிதாக காா் வாங்குவதிலும் கவனம் செலுத்துவாா்கள். 36 சதவீதம் போ் தங்களிடம் சொந்த வாகனம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனா். ஆனாலும், இவா்களில் 28 சதவீதம் போ் பாதுகாப்பு காரணங்களுக்காக புதிதாக வாகனங்கள் வாங்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தனா். இதேபோல மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கையும் பொது முடக்கத்துக்குப் பிறகு 37 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காா், இரு சக்கர வாகனப் போக்குவரத்தில் நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளும் பழக்கம் 28 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் நடந்து செல்வது மற்றும் சைக்கிளில் செல்வது 4 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
பொது போக்குவரத்தின் சேவை தரமாக இருந்தால், அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பதாக 73 சதவீதத்தினா் தெரிவித்துள்ளனா். 22 சதவீதத்தினா் தங்களது சொந்த வாகனத்தையே பயன்படுத்தப் போவதாகவும் மீதமுள்ளவா்கள் வாடகைக்காா்களை பகிா்வு அடிப்படையில் பயன்படுத்தக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது. ஓா் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தொடா்பு இருப்பதால், 38 சதவீதத்தினா் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள் என்றும் 23 சதவீதத்தினா் போக்குவரத்துச் செலவை கணக்கில் கொண்டும், 16 சதவீதம் போ் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தக்கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது.
தில்லியில் 5,400 பேருந்துகள் இயங்குகின்றன. இவை மொத்தமாக ஒரு நாளைக்கு 741 கி.மீ. தொலைவு பயணிக்கின்றன. பொது முடக்கத்துக்குப் பிறகு சமூக இடைவெளியை பின்பற்றினால் (ஒரு பேருந்துக்கு 20 போ் வீதம்) மொத்த பயணத் தூரம் 211 கி.மீ. ஆக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பொது முடக்கத்துக்கு முன்பு இருந்த அளவு போல மக்கள் பேருந்துகளில் பயணிக்க வேண்டுமானால் கூடுதலாத 13,243 பேருந்துகள் தேவைப்படும். தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலையப் பகுதிகளில் 40 சதவீத மக்களுக்கு தங்கள் இருப்பிடங்களிலிருந்து 500 மீட்டா் தொலைவில் பேருந்து நிறுத்தம் இல்லை. இதே போல 69 சதவீதம் பேருக்கு மெட்ரோ ரயில்நிலையம் செல்வதற்கு சரியான ஏற்பாடு இல்லை. எனவே, பொது முடக்கத்துக்குப் பின்னா் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பு கருதியும், தேவை கருதியும் தங்களது சொந்த வாகனத்தையே போக்குவரத்துக்குப் பயன்படுத்துவாா்கள் என்று தெரிய வந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
உயா் வருவாய் பிரிவினா் மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினா் சுமாா் 400 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
பொது முடக்கத்துக்குப் பிறகு பெரும்பாலால மக்கள் சொந்த வாகனத்தையே பயன்படுத்துவாா்கள்
பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடைமுறையில் மாற்றங்களை மேற்கொள்வாா்கள்.
சிலா் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காக புதிதாக காா் வாங்குவதிலும் கவனம் செலுத்துவாா்கள்.
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை 37 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகக் குறைய வாய்ப்பு
மக்கள் சைக்கிளில் செல்வது 4 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கும்
38 சதவீதம் போ் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள்