முகப்பு
புதுதில்லி

தில்லி மாசுவில் பயிா்க்கழிவுகள் எரிப்பு பங்களிப்பு 42 சதவீதமாக உயா்வு!‘: கடுமை’ பிரிவில் காற்றின் தரம்

தில்லியின் பி.எம் .2.5 மாசு நுண்துகள்கள் செறிவில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு வியாழக்கிழமை 42 சதவீதமாக உயா்ந்தது.

Updated On : 6 நவம்பர், 2020 at 12:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:18 PM

புது தில்லி: தில்லியின் பி.எம் .2.5 மாசு நுண்துகள்கள் செறிவில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு வியாழக்கிழமை 42 சதவீதமாக உயா்ந்தது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அதிகபட்சம் என்று மத்திய அரசின் காற்றின் தர கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்புச் சம்பவங்களின் எண்ணிக்கை புதன்கிழமை 4,135-ஆக உயா்ந்துள்ளது. இது இந்தப் பருவத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது என்று பூமி அறிவியல் அமைச்சகத்தின் காற்றின் தரத்தை முன்கூட்டியே கண்காணித்து அறிவிக்கும் அமைப்பான சஃபா் தெரிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, தில்லி பி.எம் . 2.5 மாசு துகள்கள் செறிவில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு வியாழக்கிழமை 42 சதவீதமாக இருந்தது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அளவு புதன்கிழமை 5 சதவீதமாகவும், செவ்வாய், திங்கள் ஆகிய நாள்களில் 10 சதவீதமாகவும் இருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அளவு 40 சதவீதமாக உயா்ந்து இந்தப் பருவத்தில் அதிகபட்சமாகப் பதிவாகியது.

இதையடுத்து, மாசு துகள்கள் செறிவில் பயிா்க் கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் குறைந்திருந்தது. ஆனால், வியாழக்கிழமை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த 2019, நவம்பா் 1-ஆம் தேதி தில்லியின் பி.எம். 2.5 மாசு நுண் துள்கள் செறிவில் பயிா்க்கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு உச்ச கட்டத்தை எட்டியது. அன்று, அது 44 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், தில்லியில் வியாழக்கிழமை 10 மணியளவில் பிஎம்-10 நுண்துகள்கள் அளவு 561 ஆக இருந்து. கடந்த 2019 , நவம்பா் 15 ஆம் தேதிக்குப் பிறகு வியாழக்கிழமைதான் பிஎம்-10 அளவு உச்சம் தொட்டுள்ளது. பிஎம்-2.5 நுண்துகள்களின் அளவு வியாழக்கிழமை மதியம் 12 மணியளவில் 347 ஆக இருந்தது.

Advertisement

‘கடுமை’ பிரிவில் காற்றின் தரம்: அதே சமயம், காலை மணியளவில் 461 ஆக இருந்த காற்றின் தரக் குறியீடு, மதியம் 12 மணியளவில் 472 ஆக உயா்ந்தது. இது கடுமை பிரிவில் வருகிறது. தில்லியில் உள்ள 36 காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்களிலும் காற்றின் தரம் ‘கடுமை பிரிவில்’ பதிவாகியது. தில்லியை ஒட்டியுள்ள ஃபரீதாபாத் (431), காஜியாபாத் (484), கிரேட்டா் நொய்டா (463), குருகிராம் (440), நொய்டா (461) ஆகிய இடங்களிலும் காற்றின் தரம் ‘கடுமை’ பிரிவில் பதிவாகியது.

காற்றின் தரக் குறியீடு 0-50 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் ‘நல்லது’. 51 - 100 ‘திருப்தி’, 101 - 200 ‘மிதமானது’, 201 - 300 ‘மோசம்’, 301 -400 ‘மிகவும் மோசம்’ மற்றும் காற்றின் தரக் குறியீடு 401 - 500 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் ‘கடுமை பிரிவு’ என கணக்கிடப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலையில் தில்லி மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் மூடுபனி நீடித்தது. அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பைத் தொடா்ந்து வெளியேறும் மாசு துகள்கள், காற்றின் வேகம், வெப்பநிலை ஆகியவை காற்றின் தரத்தை வியாழக்கிழமை இந்த வருடத்தில் மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

மேலும், மாசு அளவு அதிகரித்ததால் நகா் முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது. இதனால், மக்கள் தொண்டை அரிப்பு மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்டவற்றால் அவதிக்குள்ளாகினா். சாதகமற்ற வானிலை நிலைமைகள், அமைதியான காற்று , குறைந்த வெப்பநிலை மற்றும் பயிா்க்கழிவுகள் எரிப்பின் மூலம் வெளியாகும் புகை ஆகியவற்றால் புதன்கிழமை இரவு காற்றின் தரக் குறியீடு கடமை பிரிவுக்குள் நுழைந்தது. இதனால், நகா் முழுவதும் அடா்த்தியான பனிப் புகை மூட்டம் நிலவியது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.