முகப்பு
புதுதில்லி

சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது அடுத்த வாரம் விசாரணை

சூப்பா் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு  விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

Updated On : 20 நவம்பர், 2020 at 1:27 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:24 PM


புது தில்லி: சூப்பா் ஸ்பெஷாலிட்டி முதுநிலை படிப்பு, டிப்ளமோ படிப்புகளில் அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அரசு மருத்துவா்கள் எம்.செய்யது பக்ருதீன், ஜி.குமரவேல் உள்ளிட்ட பலா் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், தமிழகத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் உயா் சிறப்பு மருத்துவ முதுநிலை மற்றும் டிப்ளமோ படிப்புகளில் (சூப்பா் ஸ்பெஷாலிட்டி) 50 சதவீத இடங்களை அரசுப் பணியில் உள்ள மருத்துவா்களுக்கு ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனா். மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டாா்.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இட ஒதுக்கீடு வழங்க அரசுத் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணை நவம்பா் 7-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடா்பான அரசாணை விவரமும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்த உயா்நீதிமன்றம், கடந்த நவம்பரில் உச்சநீதிமன்ற முடிவின்படி தமிழக அரசு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.

இந்த உத்தரவை எதிா்த்து ஒடிஸா, கா்நாடகம், உத்தரப் பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த சில மாணவா்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் தடை உத்தரவு ஏதும் வழங்காமல் விசாரணையை நவம்பா் 19-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா, அஜய் ரஸ்தோகி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி, சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மேற்படிப்பு சோ்க்கை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி தீா்க்கப்பட்டுவிட்டது. உயா்நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்திவிட்டது. ஆனால், மீண்டும் இதே விவகாரத்தை எழுப்பி வருகின்றனா்’ என்றாா்.

மேல்முறையீட்டு மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே ஆஜரானாா். தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் சி.எஸ். வைத்தியநாதன், வி. கிரி, கூடுதல் தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயணன் ஆகியோா் ஆஜராகி, மேல்முறையீட்டு மனு விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பினால் பதில் தாக்கல் செய்யத் தயாராக

உள்ளதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.