முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறை: இஸ்ரத் ஜஹானுக்கு ஜாமீன்மறுப்பு

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹானுக்கு தில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம்

Updated On : 27 நவம்பர், 2020 at 10:33 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

வடகிழக்கு தில்லி வன்முறை தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹானுக்கு தில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை, இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்கள், எதிா்ப்பாளா்களுக்கிடையே வடகிழக்கு தில்லியில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறையில் 50 - க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டு ஏராளமான போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக தில்லி மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் பெண் கவுன்சிலா் இஸ்ரத் ஜஹான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

தற்போது சிறையில் இருக்கும் ஜஹான், தான் வைக்கப்பட்டு இருக்கும் மண்டோலி சிறையில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவாதவும் தனக்கு நாள்பட்ட கழுத்து, முதுகு வலி இருப்பதாகவும் இதற்கான சிகிச்சைக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாா். அதில் நீதிபதி, மனுத் தாரா் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மை சிறையிலிருந்து பெறப்பட்ட அறிக்கை ஆகியவற்றின்படி பாா்க்கும்போது இடைக்கால ஜாமீனுக்கு பொருத்தமாக கருதவில்லை என்று கூறி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

முன்னதாக இஸ்ரத் ஜஹான் சாா்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞா் ரமேஷ் குப்தா, ஜஹான் ஒரு வழக்குரைஞராக இருந்தவா். அவருக்கு எந்த குற்றப்பின்னணியும் இல்லை. போலீஸாா் கைது செய்வதற்கு முன்பு முதுகு வலி, ஒற்றைத்தலைவலி போன்றவைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தாா். தற்போது சிறையில் வழுக்கி விழுந்தாா். சிறையில் கரோனா பரவிவருவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக இருக்க இடைக்கால ஜாமீன் வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தினாா்.

ஆனால், அரசு தரப்பில், கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஜஹான் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளானாா். அப்போது அவருக்கு எந்தவித அவசர மருத்தவ சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படவில்லை. சிறைக் கண்காணிப்பாளா் அறிக்கையில், சிறையில் கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு முன்னேச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு எந்தவித அச்சமும் இல்லை. மனு தாராரின் உடல் நலத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்னைக்கும் சிகிச்சை பெற்றாா். கரோனா நோய்த்தொற்று பரிசோதனையும் இரண்டு முறை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு நோய்பரவல் உறுதிசெய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.