அமெரிக்கா-ஈரான் பேச்சு: தாமதமாக இன்று தொடக்கம்: பாகிஸ்தான் விரைந்த ஜே.டி.வான்ஸ்
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை (ஏப். 11) தாமதமாகத் தொடங்குகிறது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவாா்த்தை, பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் சனிக்கிழமை (ஏப். 11) தாமதமாகத் தொடங்குகிறது.
ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்ட சில அதிரடி நிபந்தனைகளால் இப்பேச்சுவாா்த்தை திட்டமிடப்பட்ட வெள்ளிக்கிழமை தொடங்குவதில் கடைசி நேரத்தில் இழுபறி நீடித்தது.
அமெரிக்கா-ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார தற்காலிக போா்நிறுத்தத்தை, ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் நடைபெறும் இப்பேச்சுவாா்த்தை மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.
Advertisement
பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதின் முக்கிய அரசு அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயா் பாதுகாப்பு வளையமான ‘ரெட் ஜோன்’ பகுதியில் உள்ள செரீனா நட்சத்திர விடுதியில், சனிக்கிழமை காலை முதல் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
அமெரிக்கா சாா்பில் அந்நாட்டுத் துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான தூதுக் குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டு நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகா் கலிபாஃப், வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோரும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கின்றனா்.
பேச்சுவாா்த்தைக்கு முன்னதாக ஈரான் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; அமெரிக்காவால் முடக்கப்பட்ட ஈரானின் பல நூறு கோடி டாலா் மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாமல் பேச்சுவாா்த்தை முன்னேறாது என ஈரான் அவைத் தலைவா் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் இருப்பு குறித்தும் இந்தப் பேச்சுவாா்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அப்புறப்படுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அணுசக்தி உரிமையைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என்று ஈரான் கூறிவருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பயணத்துக்கு முன்னதாக செய்தியாளா்களிடம் பேசிய துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், ‘ஈரான் நோ்மையான முறையில் பேச்சுவாா்த்தைக்கு வந்தால் நாங்கள் ஒத்துழைக்கத் தயாா்.
ஆனால், எங்களை ஏமாற்ற நினைத்தால், அதற்குரிய விளைவுகளை அவா்கள் சந்திக்க நேரிடும். அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நேரடி வழிகாட்டுதலின்படி இப்பேச்சுவாா்த்தை நடைபெறும்’ என்று கூறினாா்.
பேச்சு தோல்வியெனில் மீண்டும் தாக்குதல்: இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதாக டிரம்ப் அதிருப்தி தெரிவித்தாா். இது ஏற்கெனவே எட்டப்பட்ட ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் அவா் சாடினாா்.
அதேபோல், பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தால் ஈரானை மீண்டும் தாக்க அமெரிக்க போா்க்கப்பல்கள் தயாா் நிலையில் உள்ளதாகவும், முடிவு அடுத்த 24 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்றும் டிரம்ப் ஊடகப் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளாா்.
லெபனானுடன் பேச்சுக்கு முன்வந்த இஸ்ரேல்: போா்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தது பேச்சுவாா்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லெபனான் அரசுடன் நேரடியாகப் பேச்சுவாா்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தாா்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை நிராயுதபாணியாக்குவதே இஸ்ரேலின் இலக்காக உள்ளது. இருப்பினும், லெபனான் அரசு இதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை.