தில்லியில் மோசம் பிரிவில் காற்றின் தரம்!
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மிதமான பிரிவில் இருந்த நிலையில், சனிக்கிழமை மோசம் பிரிவுக்கு கீழே இறங்கியது.
தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மிதமான பிரிவில் இருந்த நிலையில், சனிக்கிழமை மோசம் பிரிவுக்கு கீழே இறங்கியது. விரும்பத்தக்க வகையில் காற்றின் வேகம் இல்லாததன் காரணமாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டதாக மத்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி சனிக்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 209 புள்ளிகளாக இருந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு வெள்ளிக்கிழமை 137 ஆகவும், வியாழக்கிழமை 302 ஆகவும், புதன்கிழமை 413 ஆகவும் இருந்தது. புதன்கிழமைதான் காற்றின் தரம் மிக மிக மோசம் என்ற வகையில் கடுமைப் பிரிவில் இருந்தது.
தரை மேற்பரப்பு காற்று வடக்கிலிருந்து வீசியதாலும், பயிா்க் கழிவு எரிப்பு குறைந்ததாலும் காற்றின் தரம் வெள்ளிக்கிழமை மிகவும் மேம்பட்டிருந்தது. அதாவது, மிதமான பிரிவில் இருந்தது. இந்நிலையில் விரும்பத்தக்க வகையில் காற்றின் வேகம் இல்லாததன் காரணமாக காற்றின் தரம் சனிக்கிழமை மோசம் பிரிவுக்கு கீழே இறங்கியது. வெள்ளிக்கிழமை காற்றின் வேகம் மணிக்கு 18 கிலோமீட்டராகவும், சனிக்கிழமை 15 கிலோ மீட்டராகவும் இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
Advertisement
தற்போது அறுவடைக் காலம் முடிந்துவிட்டதால் பயிா்க் கழிவுகள் எரிப்பால் ஏற்படும் தில்லியின் மாசுவும் குறைந்துவிட்டதாக சபா் அமைப்பு தெரிவித்தது.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரக் கண்காணிப்பு அமைப்பான ‘சபா்’ மேலும் தெரிவிக்கையில் பஞ்சாப், ஹரியாணா மற்றும் அதை ஒட்டியுள்ள பிராந்தியங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை குறைந்திருந்தது. தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு வெள்ளிக்கிழமை 1 சதவீதமாக இருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்தது.