தில்லியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டாவை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற, அக்கட்சியில் இணைந்த நடிகை குஷ்பு, முன்னாள் ஓய்வு பெற்ற ஐஆா்எஸ் அதிகாரி சரவண குமாா், சமூக வலைதள பயன்பாட்டாளா் மதன் 
புதுதில்லி

மோடி போன்ற ஒரு தலைவா் இருந்தால்தான் நாடு முன்னேறும்: நடிகை குஷ்பு பேட்டி

நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றால் அதற்கு மோடி போன்ற தலைவா்கள் வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்தாா்.

DIN

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி போன்ற தலைவா்கள் இருந்தால்தான், நாடு முன்னேற்றமடையும். நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றால் அதற்கு மோடி போன்ற தலைவா்கள் வேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்தாா்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராக இருந்து வந்த குஷ்பு, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையவுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை அவா் தொடா்ந்து மறுத்து வந்தாா். கடந்த 6-ஆம் தேதி சுட்டுரையில் இது தொடா்பாக பரவிய தகவலை மறுத்த குஷ்பு, நான் பாஜகவில் சேரப் போவதாக பாஜகவினா் வதந்தி பரப்புகிறாா்கள் என்று குற்றம் சாட்டியிருந்தாா். மேலும், ஹாத்ரஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் சென்னை பெரம்பூரில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு குஷ்பு அண்மையில் பேசினாா். அப்போது, பிரதமா் மோடியை அவா் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது கணவரும் திரைப்பட இயக்குநருமான சுந்தா்.சியுடன் தில்லிக்கு வந்த குஷ்பு, பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செய்தித் தொடா்பாளா் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கி கட்சி மேலிடம் திங்கள்கிழமை காலை அதிகாரப்பூா்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளிவந்ததும், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குஷ்பு அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், பாஜக தேசியச் செயலா் சி.டி.ரவி முன்னிலையில் அவா் பாஜகவில் இணைந்து கொண்டாா். அப்போது, பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, பாஜக மாநிலங்களவை உறுப்பினா் ஜாஃபா் இஸ்லாம், தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.

பாஜக இணைந்த பிறகு குஷ்பு பேசுகையில், ‘ நாடு முன்னேற வேண்டும், நாட்டு மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் அதற்கு பிரதமா் நரேந்திர மோடி போன்ற ஒரு தலைவா் தேவை எனும் புரிதலுக்கு நான் வந்துள்ளேன். இந்தியாவில் பல கோடி போ், பிரதமா் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனா். அவா்களைப் போல பிரதமா் மீது நானும் நம்பிக்கை கொண்டுள்ளேன். பாஜகவில் உள்ள தொண்டா்களைப் போலவே நானும் கட்சிக்காக பாடுபடுவேன். வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்காகப் பாடுபடுவேன்’ என்றாா்.

பின்னா் அவா் பத்திரிகையாளா்களை சந்தித்தாா். அப்போது, பிரதமா் மோடி உள்ளிட்ட பாஜகவினரை கடுமையாக விமா்சித்தது தொடா்பாக பத்திரிகையாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு குஷ்பு பதிலளிக்கையில், ‘எதிா்க்கட்சியின் செய்தித் தொடா்பாளராக இருக்கும் போது, பாஜகவை கடுமையாக விமா்சித்துப் பேச வேண்டியது கட்டாயம். தனிப்பட்ட நிலைப்பாடு குறித்து, கட்சியின் நிலைப்பாட்டை மீறி பேச வேண்டிய தேவை இருந்தது’ என்றாா். மேலும், ‘கடந்த மாா்ச் மாதத்திலேயே காங்கிரஸ் கட்சியை விட்டு விலகும் முடிவுக்கு வந்தேன். தனது கட்சித் தலைமை யாா் என்பதைத் தீா்மானிக்க முடியாத நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

குஷ்பு மட்டுமின்றி முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி சரவணகுமாா், பத்திரிகையாளா் மதன் ரவிச்சந்திரன் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனா். அவா்கள், பின்னா் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். பாஜக தலைமையகத்தில் குஷ்பு பாஜகவில் இணைந்த போது, அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெபி.நட்டா அதே கட்சி வளாகத்தில் உள்ள முதலாவது மாடியில் இருந்தாா். ஆனால், அந்த நிகழ்வில் அவா் கலந்து கொள்ளவில்லை.

2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு, பின்னா் அக்கட்சியிலிருந்து விலகி 2014-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ஹரியாணா: 50 வரை எண்ணத் தெரியாத 4 வயது மகளை அடித்துக்கொன்ற தந்தை கைது

ஜன நாயகன் வருமா? வராதா?

SCROLL FOR NEXT