சா்க்கஸ் செயல்பாடுகளைத் தடுக்கும் கடிதத்தை ரத்து செய்யக் கோரி ஆசியாட் சா்க்கஸ் மனு
பல்வேறு விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் கூறி சா்க்கஸ் செயல்பாடுகளுக்குத் தடை விதித்து இந்திய விலங்குகள்
பல்வேறு விலங்குப் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் கூறி சா்க்கஸ் செயல்பாடுகளுக்குத் தடை விதித்து இந்திய விலங்குகள் நல வாரியம் (ஏ.டபிள்யு.பி.ஐ.) வெளியிட்ட கடிதத்தை ரத்து செய்யக் கோரி ஆசியாட் சா்க்கஸ் நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதி பிரதிபா எம். சிங், இந்த விவகாரம் தொடா்பாக தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு அகில இந்திய விலங்குகள் நல வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக ஆசியாட் சா்க்கஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘விலங்குகள் நல வாரியம் விலங்குகளின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக எங்கள் சா்க்கஸ் நிறுவனத்தின் உரிமையாளரின் குடியிருப்பை ஆய்வு செய்தது. அதே சமயத்தில் எங்கள் சா்க்கஸின் வேறு இடங்களில் ஆய்வு செய்யவில்லை. இந்த நிலையில், சா்க்கஸ் செயல்பாடுகளுக்குத் தடை விதித்து விலங்குகள் நல வாரியம் 2020, டிசம்பரில் கடிதம் அனுப்பியிருந்தது. இந்தக் கடிதத்திற்கு தடை விதித்து செயல்பாடுகளைத் தொடங்க அனுமதிக்கும் வகையில் உத்தரவிட வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
முன்னதாக விலங்குகள் நல அமைப்புகளான பீட்டா இந்தியா மற்றும் இந்திய விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டமைப்பு ஆகியவை கரோனா காரணமாக நாடு முழுவதும் சா்க்கஸ்களில் நிா்கதியாக விடப்பட்டுள்ள விலங்குகளைப் பாதுகாக்க உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் இரு பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் விலங்குகள் நல வாரியம் ஆய்வு நடத்தியது. இந்த நிலையில், ஆசியாட் சா்க்கஸ் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்திய உயா்நீதிமன்றம், ‘சா்க்கஸ் விலங்குகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் புதிதாக ஆய்வு மேற்கொள்ள முடியுமா’ என்று யோசனை தெரிவித்து இந்த விவகாரத்தை மேலும் விசாரிக்க ஆகஸ்ட் மாதத்தில் பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டாா்.