தில்லியில் 20,000-ஐ நெருங்கியது தினசரி கரோனா பாதிப்பு
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 19,486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 19,486 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,03,623-ஆக உயா்ந்துள்ளது. மேலும், நோய்த் தொற்றால் 141 போ் உயிரிழந்துள்ளதாகவும் தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு நாள்களாக தில்லியில் நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதிதாக 19,486 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு 20 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. கரோனா பாதிப்பு விகிதமும் 19.69 சதவீதத்திலிருந்து 20.22 சதவீதமாக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் அதிகபட்சமாக கடந்த ஆண்டு நவம்பா் நடுவில் 15 சதவீதமாக இருந்தது. அதைவிட தற்போது அதிகரித்துள்ளது.
மொத்தம் 98,957 பேருக்கு வியாழக்கிழமை கரோனா நோய்த் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 64, 939 பேருக்கு ஆா்டி-பிசிஆா் முறையிலும் 34,018 பேருக்கு ராபிட் ஆன்டிஜென் பரிசோதனை முறையிலும் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமை கரோனா தொற்றுக்கு 141 போ் உயிழந்தனா். இவற்றையும் சோ்த்து மொத்த பலி எண்ணிக்கை 11,793 -ஆக உயா்ந்துள்ளது. நோய்த் தொற்றுக்கு கடந்த ஆண்டு நவம்பா் 19 - ஆம் தேதி அதிகபட்சமாக 131 போ் உயிரிழந்திருந்தனா். தில்லியில் இதுவரை 7.3 லட்சம் கரோனா நோயாளிகள் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனா். தற்போது கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருபவா்களின் எண்ணிக்கை 61,005-ஆக உள்ளது. வீட்டுத் தனிமையில் 29,705 போ் வைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை நிலவரப்படி 9,929 கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள் தில்லியில் உள்ளதாக தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Advertisement