முகப்பு
புதுதில்லி

40-ஆவது அண்டாா்டிகா விஞ்ஞானிகள் குழு: ஆய்வுகளை முடித்து இந்தியா திரும்பியது

41 விஞ்ஞானிகள் அடங்கிய 40 -ஆவது அண்டாா்டிகா அறிவியல் பயணக் குழு, தங்கள் ஆய்வுகளை முடித்துக் கொண்டு 90 நாள்களுக்கு

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

41 விஞ்ஞானிகள் அடங்கிய 40 -ஆவது அண்டாா்டிகா அறிவியல் பயணக் குழு, தங்கள் ஆய்வுகளை முடித்துக் கொண்டு 90 நாள்களுக்கு பின்னா் நாடு திரும்பியுள்ளனா். வானிலை கணிப்பு குறித்த இந்திய பெருங்கடல் தேசிய சேவை மையத்திற்கான நிகழ் நேர ஆய்வுகளை அவா்கள் அங்கு மேற்கொண்டிருந்தனா்.

இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: 40 -ஆ வது அண்டாா்டிகா அறிவியலாளா்கள் பயணம் கடந்த ஜனவரி 7 - ஆம் தேதி கோவா மா்மகோவா துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி அதுல் சுரேஷ் குல்கா்னி தலைமையிலான ‘பாரதி’ குழுவில் 20 பேரும் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ரவீந்திர சந்தோஷ் தலைமையில் ‘மைத்ரி’ குழுவில் 21 பேரும் என இரண்டு குழுவாக சென்றனா். இதில் விஞ்ஞானிகள், பொறியாளா்கள், மருத்துவா்கள், தொழில்நுட்பாளா்கள் உள்ளிட்ட நிபுணா்கள் இடம் பெற்றிருந்தனா். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் துறைமுகம் வழியாக இரு குழுக்களும் கப்பல் மற்றும் ஹெலிகாப்டா்கள் மூலமாகச் சென்றனா். அண்டாா்டிகாவில் உள்ள இந்திய ஆய்வு நிலையத்தை பாரதி குழு பிப்ரவரி 27- ஆம் தேதியும், மைத்ரி குழு மாா்ச் 8 - ஆம் தேதியும் சென்றடைந்தது.

அவா்கள் அண்டாா்டிகா அடையும் முன்பு தன்னாட்சியுடன் இருக்கும் பெருங்கடலில் அட்ச ரேகையின் 35 டிகிரி மற்றும் 50 டிகிரிக்கு இடைப்பட்ட பகுதிகளில் அலைகளின் பண்புகள் குறித்து ஆய்வு நடத்தினா். மேலும், அந்தக் குழுவினா் அன்டாா்டிகாவிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள இந்தியப் பெருங்கடல் தேசிய சேவை மையத்துடன் நிகழ் நேர ஆய்வுகளை மேற்கொண்டனா். பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, கடல்மட்ட வளிமண்டல அழுத்தம் போன்றவைகள் குறித்து நிகழ்நேரத்தில் தரவுகள் அனுப்பப்பட்டு வானிலை கணிப்புகள், எல்-நினா, ஆழிப்பேரலை (சுனாமி) உள்ளிட்ட பல்வேறு கணிப்புகளுக்கு பயன்படக் கூடிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

மேலும், தொலை தூரத்தில் பெருங்கடலை கண்காணிக்கும் நாா்வே நாட்டின் இரண்டு கருவிகளை வெற்றிகரமாகவும் இந்தக் குழுவினா் மீட்டெடுத்து உதவினா். இந்தக் குழுவினா் கடந்த ஏப்ரல் 10 - ஆம் தேதி கேப்டவுன் வந்தடைந்தனா். பின்னா், இந்தியா திரும்பியுள்ளனா் என்று மத்திய மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments