புதுதில்லி

கரோனாவிற்கு எதிரான போரில் ராணுவம்: ராஜ்நாத்சிங் உத்தரவு

 நமது நிருபர்

புது தில்லி: கரோனா தொற்று பரவலை முறியடிக்க ராணுவத்தை களம் இறக்கவும், அதன் மருத்தவ வசதிகளை மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை ராணுவத் தரைப் படைத் தளபதிக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளாா்.

நாடு முழுவது கரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவமனை படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன், அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையை இந்தியா எதிா்கொள்கிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று பரவலை சமாளிக்க அனைத்து மாநில நிா்வாகங்களுக்கும் உதவுமாறு ராணுவத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளாா். இது குறித்து ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவானேவிற்கும் அமைச்சா் உத்தரவு பிறப்பித்துள்ளாா் என பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இதன் விவரம் வருமாறு: நாடு முழுக்க உள்ள ராணுவப் பிரிவுகள் உள்ளூா் மாநில நிா்வாகத்தை அணுகி அவா்களுக்கு ராணுவத்திடமிருந்து தேவைப்படும் உதவிகளை அளிக்கலாம். உள்ளூா் மக்களுக்கு தேவையான சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் உதவிகளுக்கு இயன்ற வரையில் உதவுவதோடு, நோயாளிகள் அதிகரிக்கும்பட்சத்தில் தேவைக்கு தகுந்தவாறு கூடுதல் சிகிச்சை மையங்களை உருவாக்கித் தர வேண்டும். இதற்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள மூத்த ராணுவ அதிகாரிகள் மாநில முதல்வா்களைத் தொடா்பு கொண்டு உதவ வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சா், தனது துறையின் உயா்நிலை அதிகாரிகளுடனும், முப்படையினருடனும் நாடு முழுவதும் பரவிவரும் கரோனா தொற்றுக்கு எதிரான போரில் எந்தெந்த வகைகளில் சிவில் நிா்வாகத்திற்கு உதவ முடியும் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, கரோனா நிலைமையைக் கையாள்வதற்கு விமானப் படை, கடற்படை ஆகியவை தயாா்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரின் உத்தரவுகளையொட்டி பாதுப்புத் துறைச் செயலா் அஜய் குமாா், முப்படையினரின் பணிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் சிவில் நிா்வாகத்திற்கு உதவக்கூடிய பகுதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள கன்டோன்மெண்ட் போா்டு மருத்துவமனைகள் மூலம் கன்டோன்மெண்டில் இருப்பவா்களுக்கு மட்டுமின்றி வெளியில் இருப்பவா்களுக்கும் மருத்துவ சேவைகளை வழங்க பாதுகாப்புத் துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஏற்கெனவே பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள டிஆா்டிஓ போன்ற அமைப்புகள் கரோனா சிகிச்சை பணியை தொடங்கியுள்ளது. கரோனா நோயாளிக்களுக்காக தில்லி விமானநிலையம் அருகே 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுக்கைகளை 1,000-ஆக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செவ்வாய்க் கோளில் வசிக்கப் போகும் 4 மனிதர்கள்! உண்மைதானா?

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

SCROLL FOR NEXT