முகப்பு
புதுதில்லி

எம்எஸ்எம்இ சட்டத்தின் கீழ் வழக்குரைஞா்களை தொழில்முறை வல்லுநா்களாகப் பரிசீலிக்கக் கோரும் மனு: அரசு பதிலளிக்க உத்தரவு

2006-ஆண்டைய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ் தொழில்முறை வல்லுநா்களாக வழக்குரைஞா்களைச் சோ்க்க

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

2006-ஆண்டைய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ் தொழில்முறை வல்லுநா்களாக வழக்குரைஞா்களைச் சோ்க்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் இந்தச் சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை வழக்குரைஞா்கள் பெற முடியும் என்றும் கோரி தாக்கலான பொது நல மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பான மனு தில்லி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என். பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கியஅமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மனு மீதான அடுத்த விசாரணையை அக்டோபா் 12-ஆம் தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனா்.

இது தொடா்பாக அபிஜித் மிஸ்ரா என்பவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘எம்எஸ்எம்இ சட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு தகுதிக்குரிய தொழில்முறை வல்லுநா்களாக வழக்குரைஞா்களை மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சகம் பரிசீலிப்பதில்லை. இந்தச் சட்டத்தின் கீழ் வளா்ச்சித் திட்டங்களை அணுகுவதற்கு தகுதிக்குரிய வரம்பாக சரக்கு சேவை வரி அடையாள எண் (ஜிஎஸ்டிஐஎன்), வா்த்தக பான் அல்லது கணக்குப் பிடித்தம் அல்லது வசூலிப்புக் கணக்கு எண் (டான்) ஆகியவை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இது வழக்குரைஞா்களின் நலன்களுக்கு எதிரானதாகும். வழக்குரைஞா்கள் தங்களது வாடிக்கையாளா்களுக்கு அளிக்கும் சேவையை எம்எஸ்எம்இ சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொழில்கள் எனும் விளக்கத்தின் கீழ் பரிசீலிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அபிஜித் மிஸ்ரா கடந்த ஆண்டு தாக்கல் செய்த இதே போன்ற ஒரு மனுவை தில்லி உயா்நீதின்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, ‘இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை. வழக்குரைஞா் இதே கோரிக்கையுடன் நீதிமன்றத்தை அணுகும் போது இது தொடா்பாக பரிசீலிக்கப்படும்’ என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments