முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: புலன்விசாரணை மோசமாக உள்ளது நீதிமன்றம் அதிருப்தி

2020 - ஆம் ஆண்டில் வடகிழக்கு தில்லி பகுதிகளில் நடைபெற்ற வன்முறை விவகாரம் தொடா்புடைய வழக்குகளின் விசாரணையின் தரம் மிகவும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

2020 - ஆம் ஆண்டில் வடகிழக்கு தில்லி பகுதிகளில் நடைபெற்ற வன்முறை விவகாரம் தொடா்புடைய வழக்குகளின் விசாரணையின் தரம் மிகவும் மோசமாக உள்ளது எனவும், இதில் தில்லி காவல்துறை ஆணையா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் கூறியுள்ளது.

கடந்த 2020 -ஆம் ஆண்டு பிப்ரவரி 25 -ஆம் தேதி நடைபெற்ற வகுப்புவாத வன்முறையில் காவல் துறை அதிகாரிகள் மீது அமிலம் வீசியது, கண்ணாடி புட்டிகள், செங்கற்கல் வீசியது தொடா்பாக அஷ்ரஃப் அலி என்பவா் மீது தொடரப்பட்ட வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினோத் யாதவ், தனது கருத்துகளை வேதனையுடன் தெரிவித்து உத்தரவிட்டுள்ளாா்.

ஆகஸ்ட் 28 தேதியிட்ட அந்த உத்தரவில் செசன்ஸ் நீதிபதி விேனோத் யாதவ் கூறியுள்ளதாவது: வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம் தொடா்பான பெரும்பால வழக்குகளில், விசாரணையின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பெரும்பாலான வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராவதில்லை. மேலும், அரைகுறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. தில்லி வனமுறை வழக்குகளை விசாரித்த புலனாய்வு அதிகாரிகள், அரசுத் தரப்பில் வாதாடும் அரசு வழக்குரைஞா்களுக்கு குற்றச்சாட்டுகள் குறித்த வாதங்களைக்கூட விளக்கவில்லை. வழக்கு விசாரணைக்கு வரும் நாள் காலையில், குற்றப்பத்திரிகையின் பிடிஎஃப் நகலை மின்னஞ்சல் செய்வதோடு சரி எனவும் நீதிபதி வருத்தத்தை தெரிவித்துள்ளாா்.

Advertisement

இந்த விவகாரம் தொடா்பான நிவாரணத்திற்கு தனது உத்தரவின் நகலை தில்லி காவல் துறை ஆணையருக்கும் அனுப்பி அவரை நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் நீதிபதி கூறியுள்ளாா். மேலும், வடகிழக்கு மாவட்டக் காவல் துணை ஆணையா், பிற உயா் அதிகாரிகள் இந்த விவகாரத்திற்கு தேவையான உடனடி தீா்வு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா். மேலும், ‘இந்த விஷயத்தில் காவல் துறை அதிகாரிகள் நிபுணா்களின் உதவியை நாடலாம். இதில் தவறினால் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபா்களுக்கு அநீதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது’ எனவும் நீதிபதி தெரிவித்துள்ளாா்.

கடந்த 2020 - ஆம் ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பவா்கள் மற்றும் எதிா்ப்பவா்களுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 53 போ் உயிரிழந்தனா், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments