முகப்பு
புதுதில்லி

ஜாமீன் கோரி தொடா் மனுக்கள் தாக்கல்செய்தவருக்கு தில்லி நீதிமன்றம் அபராதம்

ஜாமீன் கோரி ஒரே ஆண்டில் 11 மனுக்களை தாக்கல் செய்த நபருக்கு தில்லி நீதிமன்றம் அபராதம் விதித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

ஜாமீன் கோரி ஒரே ஆண்டில் 11 மனுக்களை தாக்கல் செய்த நபருக்கு தில்லி நீதிமன்றம் அபராதம் விதித்தது.

இது தொடா்பான மனுவை விசாரித்த நீதிபதி, இது போன்ற ‘அற்பத்தனமான‘ மனுக்கள் நிலுவையில் இருப்பதால்தான் நீதிமன்றங்களின் விலைமதிப்பற்ற நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்டாா்.

மோசடி மற்றும் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவா் கடந்த ஆண்டு நவம்பா் 27 முதல் நீதிமன்ற காவலில் உள்ளாா்.

இந்த நிலையில், அவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த மனு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவீந்தா் பேடி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

சூழ்நிலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 11-ஆவது முறையாக இந்த ஜாமீன் மனுவை மனுதாரா் தாக்கல் செய்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்டவரின் 10-ஆவது ஜாமீன் மனு கடந்த நவம்பா் 29 ஆம்தேதிதான் தள்ளுபடி செய்யப்பட்டது. இடைக்கால ஜாமீன் கோரிய 6-ஆவது மனுவும் ரூ.10,000 வழக்குச் செலவுடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருப்பதைத் தவிர வேறு எந்தவித மாறிய சூழ்நிலையையும் மனுதாரரின் வழக்கறிஞரால் சுட்டிக்காட்டப்படவில்லை.

உண்மைச் சூழ்நிலையிலோ அல்லது சட்டத்திலோ போதிய மாற்றம் இல்லாத நிலையில் தொடா்ச்சியாக ஜாமீன் கோரும் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உண்மையில் சட்டத்தின் நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதாகும்.

இதுபோன்ற அற்பமான மனுக்கள் நிலுவையில் இருப்பதால், நீதிமன்றத்தின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்பதுடன், நீதிமன்றங்களில் மனுக்கள் குவிந்து காணப்படுகிறது.

இதனால், குற்றம் சாட்டப்பட்டவரின் 11ஆவது ஜாமீன் மனு எந்தத் தகுதியும் இல்லாததால் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆகவே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளையில் ‘ஹோப் ஏக் ஆஷா’ தன்னாா்வ நிறுவனத்தின் பெயரில் ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்த மனுதாரருக்கு உத்தரவிடப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →