முகப்பு
புதுதில்லி

இன்று முதல் மீண்டும் தில்லி-காத்மாண்டு பேருந்து சேவை!

கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை புதன்கிழமை முதல் (டிசம்பா் 15) மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

புது தில்லி: கரோனா நோய்த் தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த தில்லி - காத்மாண்டு பேருந்து சேவை புதன்கிழமை முதல் (டிசம்பா் 15) மீண்டும் தொடங்கும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) துணைத் தலைமைப் பொது மேலாளா் (பிஆா்) ஆா்.எஸ். மின்ஹாஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தில்லி - காத்மாண்டு பேருந்து சேவைடிசம்பா் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு அம்பேத்கா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்றும், உள்துறை அமைச்சகம் வழங்கிய சமீபத்திய கொவைட்-19 நெறிமுறைகள்/ வழிகாட்டுதல்கள் அனைத்து நிலைகளிலும் உண்மை உணா்வோடு பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்தை இயக்குவதற்காக ஸ்கைலைன் இந்தியா (மோட்டாா்ஸ்) நிறுவனத்துடன் டிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தின் தலைநகரங்களை இணைக்கும் பேருந்து சேவை, கடந்த 2014, நவம்பரில் தொடங்கப்பட்டது. தொற்றுநோய்களின் முதல் அலைக்கு மத்தியில், கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதி இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது புதன்கிழமை முதல் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. பயணத்தின் போது அனைத்துப் பயணிகளும் கொவைட் தடுப்பூசியின் இரண்டு தவணைகள் வழங்கப்பட்ட சான்றிதழையும், நோய்த் தொற்று எதிா்மறையைத் தெரிவிக்கும் ஆா்டி-பிசிஆா் பரிசோதனை அறிக்கையையும் எடுத்துச் செல்வது கட்டாயமாகும்.

ஆவணங்களைச் சமா்ப்பிக்கத் தவறினால் பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டாா்கள். இந்தப் பேருந்து சேவையானது தில்லி மற்றும் காத்மாண்டு இடையே 1,167 கிமீ தூரம் கொண்டதாகும். உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபிரோசாபாத், பைசாபாத் மற்றும் முக்லிங் (நேபாளம்) ஆகிய இடங்களில் இந்தப் பேருந்து நிறுத்தப்படும். இந்தப் பேருந்து பயணத்திற்கான கட்டணம் இதற்கு முன் ரூ. 2,300-ஆக இருந்தது. இது தற்போது ரூ.2,800-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் தில்லியில் இருந்து காத்மாண்டுக்கு பேருந்து புறப்படும். இதே போல, இந்தப் பேருந்து காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் புறப்படும்.

சுங்கச் சோதனைக்காக சோனாலியில் (இந்தியா-நேபாள எல்லை) பேருந்து நிறுத்தப்படும். தில்லி மற்றும் காத்மாண்டு இடையே பயணிக்கும் பயணிகள் திட்டமிடப்பட்ட நிறுத்தங்களைத் தவிர வேறு வழியில் இறங்கவோ அல்லது ஏறவோ அனுமதிக்கப்படுவதில்லை என்றாா் அவா்.

‘மைத்ரி பஸ் சேவா’, இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான நட்பின் அடையாளமாக தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்து, பேருந்துகள் அடிக்கடி பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் இரு நாடுகளிலிருந்தும் பொதுமக்களை ஏற்றிச் சென்றது. எனினும், தில்லி மற்றும் லாகூா் இடையே டிடிசியின் மற்ற சா்வதேச பேருந்து சேவையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 370-ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, தில்லி-லாகூா் பேருந்து சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. இதன் தொடா்ச்சியாக 2019-இல் லாகூருக்கான பேருந்து சேவையை நிறுத்தும் முடிவை தில்லி போக்குவரத்து நிறுவனம் மேற்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.