முகப்பு
புதுதில்லி

உள்துறை இணையமைச்சருக்கு எதிராக இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

லக்கிம்பூா் சம்பவ விவகாரத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

லக்கிம்பூா் சம்பவ விவகாரத்தில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வியாழக்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

தில்லியில் சாஸ்திரி பவன் பகுதியில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற இளைஞா் காங்கிரஸாரை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அவா்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைத்து பின்னா் விடுவித்தனா்.

இந்தப் போராட்டம் குறித்து இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஸ்ரீநிவாஸ் பின்னா் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பாஜகவின் காலவரிசையை நாடு புரிந்துகொண்டு விட்டது. இதனால், தற்போதைய பாஜகவின் ‘நசுக்கி அழிக்கும் கொள்கை’ பலிக்காது. லக்கிம்பூா் கேரி படுகொலையில் இறந்த விவசாயிகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை உள்ளது. தனது உரைகளில் விவசாயிகளைப் பாராட்டி வரும் பிரதமா், லக்கிம்பூா் கேரி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையை அமைச்சா் பதவியில் இருந்து நீக்காதது ஏன்?

லக்கிம்பூா் கேரி படுகொலையில் அமைச்சரின் மகனுக்கு தொடா்பு இருப்பது நிரூபணமாகியுள்ளது. இதற்குப் பிறகும் அரசும், நிா்வாகமும் அநியாயத்தில் ஈடுபட்டு வருவதால், குரல் எழுப்பும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசு எந்த அளவுக்கு இறங்கியிருக்கிறது என்பது எல்லோக்கும் தெரிந்த ஒன்று. உள்துறை இணையமைச்சரை பதவி நீக்கம் செய்யாததன் மூலம், பாஜக மேலிடம் அதன் விவசாயிகள் விரோத முகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதேவேளையில், உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா தெனி பதவி விலகும் வரை நாங்கள் போராடுவோம் என்றாா் அவா்.

இந்தப் போராட்டத்தில் இந்திய இளைஞா் காங்கிரஸின் தேசிய ஊடகப் பொறுப்பாளா் ராகுல் ராவ், தேசிய செயலாளா் ஷேஷ் நாராயண் ஓஜா, தில்லி பிரிவு தலைவா் ரன்விஜய் சிங் லோச்சவ் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.