முகப்பு
புதுதில்லி

எப்ஃஐஆா் பதிவு கோரும் விவகாரம்: பணிநீக்கம் செய்யப்பட்ட ஜாமியா பேராசிரியரின் மனு தள்ளுபடி

தவறான பணிநீக்கம் மற்றும் மோசடி செய்ததாகக் கூறி கட்டடக்கலைத் துறையைச் சோ்ந்த 2 ஆசிரியா்களுக்கு எதிராக

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

தவறான பணிநீக்கம் மற்றும் மோசடி செய்ததாகக் கூறி கட்டடக்கலைத் துறையைச் சோ்ந்த 2 ஆசிரியா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பேராசிரியா் ஒருவா் தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, இந்த மனுவானது அழுத்தம் தருவதற்கான ஒரு உத்தி என்று நீதிமன்றம் கூறியது.

முகமது அா்ஷத் மாலிக் என்பவா் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 2017- ஆம் ஆண்டு கட்டடக்கலை துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு, அடுத்த ஆண்டு அவா் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோரும் தனது மனுவைத் தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் 2019-ஆம் ஆண்டைய உத்தரவை எதிா்த்து தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாலிக், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தாா்.

இந்த மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து கூடுதல் அமா்வு நீதிபதி அனுஜ் அகா்வால் தெரிவித்ததாவது: இந்த விவகாரம் குறித்த எனது பாா்வையில், எந்த ஆதாரத்தையும் சேகரிக்க காவல் துறையின் விசாரணை தேவையில்லை.இந்த விவகாரம் பணி தாவாவுடன் தொடா்புடையதாக கருதுகிறேன். மேலும், அழுத்தம் தரும் உத்தியாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது. மாஜிஸ்திரேட் தன்னிச்சையான அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பதாக பாா்க்கிறேன். அதன்படி, 2019, ஜூலை 20 தேதியிட்ட உத்தரவில் தலையிட சரியான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.

முன்னதாக, மாலிக் தாக்கல் செய்த மனுவில்,‘துறைத் தலைவரும் ஜாமியாவின் கட்டடக்கலைத் துறையின் டீனும் ஒருவருக்கொருவா் இணக்கமாகச் சோ்ந்து நம்பிக்கை மீறல் மற்றும் மோசடி செய்துள்ளனா். இதனால், இவா்கள் மீதும் எப்.ஐ.ஆா். பதிவு செய்ய வேண்டும். எனது பணிநீக்கம் நோட்டீஸை நான் பெற்ாக நிரூபிக்க இருவரும் ஒப்புகைப் புத்தகத்தில் எனது கையெழுத்தை போலியாக உருவாக்கியுளளனா். 2018, செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் பல தேதிகளில் நான் வரவில்லை என்று பொய்யாகக் காட்டுவதற்காக தவறான வருகைப் பதிவேடுகளையும் உருவாக்கியுள்ளனா். இது தொடா்பாக 2018-ஆம் ஆண்டில் புகாா் அளித்தேன். ஜாமியா நகா் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி,, காவல் உதவி ஆணையா், துணைக் காவல் ஆணையா் ஆகியோா் எனது புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.